நீடித்து உழைக்கும் சாதனங்களின் சில்லறை விற்பனையில் நாட்டில் முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி, கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் அண்மையில் ஏற்பாடு செய்திருந்த விசேட நிகழ்வொன்றில் உயர் மட்ட வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன Sony BRAVIA OLED தொலைக்காட்சி உற்பத்தி வரிசை தொடர்பில் விளக்கமளித்துள்ளது. 

சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரான மொஹான் பண்டிதகே, சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளரான குமார் சமரசிங்க மற்றும் Sony International (Singapore) Ltd நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி அலுவலகத்தின் கிளைத் தலைமை அதிகாரியான ஜஸ்டின் வோங் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர்.

புதிய Sony BRAVIA OLED தொலைக்காட்சி சாதனங்கள் தனித்துவமான விம்ப செயலி (image processor) மற்றும் காட்சி சாதன (display device) தொழில்நுட்பங்களின் இணைப்புடன், 4K HDR (High Dynamic Range)உள்ளடக்கத்தின் மிகச் சிறந்த பாவனையைக் கொண்டுள்ளன. விபரமான நிழல் காட்சிகள் மற்றும் ஒவ்வொரு காட்சியும் மிக ஆழமான துல்லியத்துடன் மிகவும் நேர்த்தியான மற்றும் முன்னெப்போதும் கிடைக்கப்பெற்றிராத காட்சி மாறுபாடுகளை அவை காண்பிக்கின்றன. 

ஒவ்வொரு காட்சியையும் உயிரோட்டம் கொண்டதாக மாற்றியமைக்கின்ற அதிநவீன 4K HDR படங்களின் தலைமுறையை மேம்படுத்தும் வகையில் 4K HDR Processor X1TM Extreme வடிவமைக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சியைப் பார்ப்பவர்களுக்கு அவர்கள் காண்கின்ற அனைத்து காட்சிகளையும் முன்னெப்போதும் இல்லாத வகையில் தரமான படத்தை விநியோகிப்பதுடன் எந்தவொரு காட்சியையும் உள்ளடக்கத்தையும் 4K HDR தரத்திற்கு இணையானதாக மாற்றியமைக்கின்றது. 8 மில்லியனுக்கும் அதிகமான சுய ஒளிர்வுக் காட்சிகள் (self-illuminating pixels) இந்த செயலியின் (processor) மூலமாக துல்லியமாகவும் தனித்தனியாகவும் கட்டுப்படுத்தப்படுகின்றன.

ஒட்டுமொத்த முகத்திரையிலிருந்தும் ஒலி வெளிக்கிளம்பும் வகையில் “Acoustic Surface” தொழில்நுட்பத்துடன் BRAVIA OLED வெளிவருவதுடன் தொலைக்காட்சி பார்ப்பவரை வியப்பூட்டும் வகையில் புதிய பொழுதுபோக்கு அனுபவங்களினுள் திளைக்கச் செய்கின்றது. தொலைக்காட்சியின் பின்புறத்திலுள்ள இரு ஊக்கிகள் (actuators) படங்களையும் ஒலியையும் மிகவும் நேர்த்தியாக ஒருங்கிணைக்கும் வகையில் ஒலியைத் தோற்றுவிப்பதற்கு முகத்திரையை அதிர்விக்கின்றன. இப்புத்தாக்க தொழில்நுட்பமானது பார்க்கும் திரையின் அளவை உச்சப்படுத்தும் வகையில் அனைத்து 4 பக்கங்களிலும் ஒடுங்கிய சட்டத்துடனான விளிம்புகளைக் கொண்டுள்ளமை பாரிய அளவிலான திரைக்கு வழிகோலுகின்றது. 

திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் apps போன்ற உள்ளடக்கங்களைக் கூட மிக இலகுவாக குரல் வழி கட்டளையின் மூலமாக பார்வையாளரால் கட்டுப்படுத்தக்கூடிய நவீன குரல் வழிக் கட்டுப்பாட்டை வழங்கும் Android தொலைக்காட்சியுடன் Sony BRAVIA OLED வெளிவருகின்றது. 65 அங்குலம் மற்றும் 55 அங்குலம் ஆகிய 2 அளவுகளில் இது கிடைக்கப்பெறுவதுடன் சிங்கர் நிறுவனத்தின் 3 வருட உத்தரவாதமும் கிடைக்கப்பெறுகின்றது.

இந்த அறிமுக நிகழ்வு தொடர்பாக தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளரான குமார் சமரசிங்க,

“பெறுமதிமிக்க எமது வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன தொழில்நுட்பத்தை வழங்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் சிங்கர் எப்போதும் செயற்பட்டு வந்துள்ளது. இந்த அதிநவீன Sony BRAVIA OLED தொலைக்காட்சி சாதனங்களின் மூலமாக எம்மால் அதனை அச்சொட்டாக நிறைவேற்ற முடிந்துள்ளது. புதிய Sony தொலைக்காட்சி சாதனங்கள் வழங்கும் புதிய அனுபவத்தை எமது வாடிக்கையாளர்கள் அனைவரும் நன்றாக அனுபவித்து மகிழ்வர் என நான் திடமாக நம்புகின்றேன்.” என்று குறிப்பிட்டார்.