சவுதி அரேபியாவில் பெண்கள் லொறி, மோட்டார் சைக்கிள் ஓட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக சுமார் 13 லட்சம் வெளிநாட்டு ஓட்டுநர்களின் வேலை பறிபோகும் என்று அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சவுதி அரேபிய மன்னர் சல்மானும் அவரது மகனும் பட்டத்து இளவரசருமான முகமது பின் சல்மானும் பல்வேறு பொருளாதார சமூக சீர்திருத்தங்களை அமுல்படுத்தி வருகின்றனர்.

அந் நாட்டில் பெண்கள் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடை கடந்த செப்டம்பரில் நீக்கப்பட்டது. அதன்படி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பெண்கள் முறைப்படி உரிமம் பெற்று கார் ஓட்டலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து லொறி, மோட்டார் சைக்கிள் ஓட்டவும் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று சவுதி அரேபிய அரசு நேற்றுமுன்தினம் அறிவித்தது. இந்த நடைமுறையும் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அமுலுக்கு வருகிறது.

சவுதியில் 13 லட்சம் வெளிநாட்டு சாரதிகள்  பணியாற்றி வருகின்றனர். பெண்கள் பைக், கார், லொறி ஓட்ட அனுமதி அளிக்கப்பட்டிருப்பதால் பெரும்பாலான வெளிநாட்டு சாரதிகள் வேலை பறிபோகும் என்று கூறப்படுகிறது.

இதன்காரணமாக சவுதி அரேபியாவுக்கு ஆண்டுக்கு 56,365 கோடி ரூபா மிச்சமாகும் என்று அந் நாட்டு பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.