பிரிட்டன் இளவரசரான ஹரிக்கும், அவரது காதலி மேகன் மார்க்லேவுக்கும் அடுத்த ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளது என கென்சிங்டன் அரண்மனை அறிவித்துள்ளது. பிரிட்டன் அரியணை வரிசையில் ஐந்தாவதாக அமரவுள்ள இளவரசர் ஹரி  கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லேவை காதலித்து வருகிறார். இந்த ஜோடி, கடந்த மாத ஆரம்பத்தில் நிச்சயம் செய்துகொண்டது.

ஹரி, அடுத்த இளவேனிற்காலத்தில் மார்க்லேவை திருமணம் செய்துகொண்டு, லண்டன் கென்சிங்டன் அரண்மனையில் உள்ள நொட்டிங்ஹாம் மாளிகையில் அவரோடு வசிக்கவுள்ளார். இவர்களது திருமண நாள் பற்றிய விவரங்கள் சிறிது காலத்துக்கு பிறகு அறிவிக்கப்படும் என கிளாரன்ஸ் ஹவுஸ் கடந்த மாதம் வெளியிட்ட  அறிக்கையில் கூறியிருந்தது.

இந்நிலையில், பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரது காதலி மேகன் மார்க்லேவுக்கு அடுத்த ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி திருமணம் நடைபெற உள்ளது என கென்சிங்டன் அரண்மனை நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவர்களது திருமணம் வின்ட்சர் மாளிகையில் உள்ள புனித ஜோர்ஜ் ஆலயத்தில் நடைபெறும் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.