பதுளை மாவட்டத்தில் பதினொரு உள்ளுராட்சி மன்றங்களுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்கள் ஆகியன சார்பாக 53 பேர் கட்டுப் பணத்தினை செலுத்தியபோதிலும் 52 பேர் மட்டுமே வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி, ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி, ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி, ஜனசெத பெரமுன ஆகிய அரசியல் கட்சிகளும், எட்டு சுயேச்சைக் குழுக்களுமாக தத்தம் வேட்பு மனுக்களை, பதுளை மாவட்ட தெரிவு அத்தாட்சி அலுவலர் நிமால் அபயசிரியிடம் கையளித்தன.

53 பேர் கட்டுப்பணம் செலுத்திய போதிலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பண்டாரவளைக்கு வேட்பு மனுவை சமர்ப்பிக்கவில்லை. அத்துடன் அம்முன்னணி சமர்ப்பித்த பதுளை மற்றும் மகியங்கனை பிரதேச சபைகளுக்கு சமர்ப்பித்த வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. பெண்களுக்கான பிரதிநிதித்துவமின்மை மற்றும் வேட்பாளர் கையொப்பமிட்ட போதிலும் அவர் பெயர் வேட்பு மனுவில் குறிப்பிடப்படாமை ஆகிய தவறுகளினாலேயே, அவ் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அத்துடன் மகியங்கனை பிரதேச சபைக்கான சுயேச்சைக் குழுவின் வேட்பு மனுவிலும் பல்வேறு குழறுபடிகள் காரணமாக நிராகரிக்கப்பட்டது.

மூன்று வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதோடு, ஒரு வேட்பு மனு சமர்ப்பிக்கப்படாத நிலையில் 49 வேட்பு மனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. நாட்டின் முதற்கட்டமாக 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்ட இவ்வேளையில் பதுளை மாவட்டத்தில் 11 உள்ளுராட்சி மன்றங்களுக்கு வேட்பு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. 

இவ் உள்ளுராட்சி மன்றங்களுக்கு 147 பேரை தெரிவு செய்வதற்கு 860 வேட்பாளர்கள் வேட்பாளர் பட்டியல்களில் உள்ளடங்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினப் பெண்கள் 236 பேர், தமிழ்ப்பெண்கள் 65 பேர், முஸ்லீம் பெண்கள் நான்கு பேர், தமிழர்களில் ஆண்கள் 119 பேர், முஸ்லீம் ஆண்கள் 40 பேர் என்ற வகையில் பட்டியல்களில் உள்ளடங்கியுள்ளனர். 

இவர்களில் பெரும்பான்மையினம் சார் ஆண்கள் 396 பேராகவுள்ளனர். பதுளை மாவட்ட தெரிவு அத்தாட்சி அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்களில் முதலாவது மற்றும் இரண்டாவது பட்டியல்களில் உள்ளடக்கப்பட்ட பெயர்களின் அடிப்படையிலே, மேற்படி தொகை அமைந்துள்ளன. 

புரட்சித் தமிழர் பேரவை என்ற அமைப்பின் ஊடாக சுயேச்சைக் குழுவாக எல்ல பிரதேச சபைக்கென்று சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுவில் தமிழர்கள் 15 பேரும் ஒன்பது தமிழ் யுவதிகளும் உள்ளடங்கியுள்ளனர். மக்கள் விடுதலை முன்னனி சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்களில் 26 தமிழர்கள் உள்ளடங்கிய போதிலும் அவர்களில் 19 பேர் தமிழ் யுவதிகளாகும். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பட்டியலில் 41 பேர் தமிழர்கள் இவர்களில் 10 பேர் தமிழ்ப் பெண்களாகும்.

ஐக்கிய தேசியக் கட்சிப் பட்டியலில் 35 பேர் தமிழர்களாகவும் அவர்களில் 7 பேர் தமிழ்ப் பெண்களாகும். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிப் பட்டியலில் 19 பேர் தமிழர்களாகவும் அவர்களில் 6 பேர் தமிழ்ப் பெண்களாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மக்கள் விடுதலை முன்னணி பண்டாரவளை பிரதேச சபைக்கும் மாநகர சபைக்கும் போட்டியிடவில்லை. பண்டாரவளை உமாஓயா திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள், இரு பெரும் கட்சிகளிலும் விரக்தியுற்று, அவ்விரு கட்சிகளைச் சார்ந்தவர்கள் இரு சுயேச்சைக் குழுக்களாக களம் இறங்கும் வகையில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவ்விரு சுயேச்சைக் குழுக்களுக்கு மக்கள் விடுதலை முன்னணி பூரண ஆதரவினை வழங்கும் வகையிலேயே, மக்கள் விடுதலை முன்னணி தனித்து போட்டியிடவில்லையென்று ஊவா மாகாண சபையின் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் சமந்த வித்தியாரட்ண தெரிவித்தார்.

பதுளைப் பகுதிகளில் தேர்தல் வன்முறைகள் எதுவும் இடம்பெறாத போதிலும் பிபிலை நகரில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் பதாதைகள் பல தீயிட்டு அழிக்கப்பட்டிருப்பதாகவும் இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் பதியப்பட்டுள்ளது. இதுவே இப்பகுதியில் முதல் தேர்தல் வன்முறையாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இரு பிரதேச சபைகளுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை குறித்து, சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள, முன்னனியின் உயர்பீடம் ஏற்பாடுகளை செய்து வருகின்றது.

ஊவா மாகாண முதலமைச்சரின் பாரியாரான செஹானி பஸ்நாயக்க எல்ல பிரதேச சபைக்கான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைமை வேட்பாளராக நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

எதிர்வரும் 18 இல் புரட்சித் தமிழர் பேரவை பசறை மற்றும் ஹாலிஎல ஆகிய இடங்களில் உள்ளுராட்சி மன்றங்களுக்கும் தத்தமது வேட்பு மனுக்களை சமர்ப்பிக்க உள்ளது. அவ்விரு வேட்பு மனுக்களிலும் தமிழ் இளைஞர்களும் யுவதிகளுமே முழுமையாக அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.