நல்லெண்ண அடிப்படையில் முதல் கட்டமாக இலங்கையில் சிறைவைக்கப்பட்டிருந்த 16 மீனவர்களை ஊர்காவற்றுறை நீதிமன்றம் விடுதலை செய்தது.

இராமேஸ்வரத்தில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் மீன்பிடிக்கச் சென்று இந்த மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். 

மூன்று விசைப்படகுகளில் சென்ற இந்தப் பதினாறு மீனவர்களும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் பொலிஸாரால் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், அவர்களை விடுதலை செய்யுமாறு விடுக்கப்பட்ட ஜனாதிபதியின் பரிந்துரையின் பேரில், நீதிமன்றம் மீனவர்களை விடுவித்தது.

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் துணைத் தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இவர்களுடன், கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டிருக்கும் தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்கள் 114 மீனவர்களும் எதிர்வரும் திங்கட்கிழமை விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்களுடன் சேர்ந்தே தற்போது விடுதலையாகியிருக்கும் 16 மீனவர்களும் தமிழகம் செல்வார்கள் என்று கூறப்படுகிறது.