உலகிலேயே முதன்முறையாக, ஒட்டகங்களுக்கென்று பிரத்தியேகமான வைத்தியசாலை ஒன்று டுபாயில் திறக்கப்பட்டுள்ளது.

சுமார் எட்டு மில்லியன் பவுண்ட்ஸ் செலவில் (இலங்கை மதிப்பில் சுமார் 165 கோடி ரூபா) அதிநவீன மருத்துவ உபகரணங்கள், உலகின் சிறந்த கால்நடை மருத்துவர்கள் என, உயர் தரக் கட்டமைப்பில் உருவாகியுள்ளது இந்த மருத்துவமனை.

பாலைவனங்களில் மட்டுமன்றி, நகரங்களில் ஒட்டகப் பந்தயம், ஒட்டக அழகுப் போட்டிகள் என ஒட்டகங்களை மையப்படுத்திய நிகழ்வுகள் பலவும் மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்று வருகின்றன.

டுபாயிலும் ஒட்டகங்களை செல்லப் பிராணிகளாக வளர்க்கும் செல்வந்தர்கள் பலரும் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையிலேயே இந்த மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது.

மனிதர்கள் மட்டுமே பெற்றுக்கொள்ளும் எக்ஸ்ரே, அல்ட்ராசௌண்ட் போன்ற அனைத்துப் பரிசோதனை வசதிகளுடன், சத்திர சிகிச்சைக் கூடங்கள், ஒட்டகங்கள் தங்கி சிகிச்சை பெற்றுக்கொள்ளும் வகையில் பெரிய அறைகள் என அனைத்து வசதிகளும் இங்கு உண்டு.

இந்த மருத்துவமனை மூலம் ஒட்டகங்கள் பற்றி இதுவரை தெரியவராத பல இரகசியங்களைத் தெரிந்துகொள்ள முடியும் என்பதுடன், அவற்றுக்கான தரமான மருந்துகளை உற்பத்தி செய்யவும் முடியும் என இதன் நிறுவனர்கள் தெரிவிக்கின்றனர்.