காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி நாளை பதவியேற்க உள்ளதால், அரசியலில் இருந்து சோனியா காந்தி முழுக்க ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1998ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சி தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். சமீப காலமாக வயது மூப்பு காரணமாக அடிக்கடி உடல் நலக்குறைவு பிரச்சினையை அவர் சந்தித்து வருகிறார். இதனால் அவ்வப்போது வெளிநாட்டில் சோனியா காந்தி சிகிச்சை பெற்று வருகிறார்.

உடல் நலம் ஒத்துழைக்காததனால்  சமீபத்தில் நடைபெற்ற குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தின் சட்டசபை தேர்தல் பிரச்சாரங்களில் சோனியா காந்தி பிரசாரம் செய்யவில்லை. 

ராகுல் காந்திதான் மேற்கண்ட இரு மாநிலங்கலிலும் தீவிர பிரசாரங்கள் செய்து வந்தார். இதையடுத்து காங்கிரஸ் தலைவராகவும் சமீபத்தில் ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாளை ராகுல் காந்தி முறைப்படி தலைவர் பொறுப்பை ஏற்க உள்ளார். இந் நிலையில் சோனியா காந்தி நாளை முதல் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றத்திற்கு இன்று வருகை வந்த சோனியா காந்தியிடம் இதுகுறித்து நிருபர்கள் கேட்டபோது, "இனிமேல் என்னுடைய வேலை ஓய்வு பெறுவதுதான்" என்று  கூறியுள்ளார். இதன் மூலம் சோனியா காந்தி நாளை தனது ஓய்வு முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என தெரிகிறது.