தேங்காயை நிர்ணய விலையான 75 ரூபாவுக்கு  மேல் விற்பனை செய்வதனை  அனுமதிக்க முடியாது என கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் க.கம்சநாதன்  வியாபாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கிளிநொச்சி சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை நிர்ணய விலையான 75 ரூபாவுக்கு  மேல் பல விலைகளில் விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று காலை சந்தையில் தேங்காய் விற்பனை செய்யும் வியாபாரிகளை அழைத்து அவா் மேற்கண்டவாறு  அறிவித்துள்ளார்.

அத்தோடு சந்தைக்கு உற்பத்தியாளர்களால்  கொண்டு வரப்படுகின்ற தேங்காய்களை கூறு விலையில்   வியாபாரிகளால் பெற்றுக்கொள்ளப்படுகின்ற போது 75 ரூபாவுக்கு விற்பனை செய்யக கூடியவாறு கூறு விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்த  செயலாளர்  நிர்ணய விலைக்கு மேல்  தேங்காய் விற்பனை செய்யட்டால் அதற்காக விலைக்கட்டுப்பாட்டு பிரிவால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு தாங்கள் பொறுப்பல்ல எனவும் குறிப்பிட்டார்.

தென்னிலங்கையை சேர்ந்த சில  நிறுவனங்கள் நேரடியாக தென்னந் தோட்டங்களுக்கு சென்று தேங்காய்களை  உரிக்காமல் கிலோ ஒன்றுக்கு 80 ரூபாவுக்கு  மேல் கொடுத்து பெற்றுச் செல்கின்றார்கள். எனவே சந்தையில் நாங்கள் 75 ரூபாவுக்கு விற்பனை செய்யும் வகையில் தேங்காயின் கொள்வனவு விலையை நிர்ணயித்தால் சந்தைக்கு வரும் தேங்காய்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். அத்தோடு அம்பாள்குளம் பொருளாதார நிலையத்திற்கு பலா் தேங்காய்களை கொண்டு செல்கின்றனர்  காரணம் அங்கு வரி அறவிடப்படுவதில்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.