இந்தியாவின் கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தலித் மாணவி ஜிஷா கொலை வழக்கில் கைதான அமீருல் இஸ்லாமுக்கு மரண தண்டனை விதித்து எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

கேரளாவைச் சேர்ந்த சட்டக் கல்லூரியில் படித்து வந்த தலித் மாணவி ஜிஷா, பெரும்பாவூர் அருகே வட்டோலிப்படி என்ற இடத்தில் தனது வீட்டில் கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

தனிப்படை அமைக்கப்பட்டு  பொலிஸார் தீவிர விசாரணை செய்த போது சந்தேகத்தின் பேரில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி அமீருல் இஸ்லாம் என்பவரை கடந்த ஆண்டு ஜூன் மாதம்  16ஆம் திகதி  தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் கைது செய்தனர்.

வழக்கு விசாரணையில் 100 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். பொலிஸ் தரப்பில் 290 ஆவணங்களும் 36 ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டன. வழக்கு விசாரணை முடிந்து எர்ணாகுளம் முதன்மை  நீதிமன்றம் நேற்று முன்தினம்  அமீருல் இஸ்லாம் குற்ற வாளி என நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்தது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை முதலில் இருந்து புலனாய்வு துறையினர்  மூலம் விசாரணை செய்ய வேண்டும் தான் அப்பாவி என்றும் அமீருல் இஸ்லாம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.

இதை தொடர்ந்து இன்று  குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி  இறுதி தீர்ப்பளித்துள்ளார்.