ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தம் ஒருவாறு முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால், அதையிட்டு மகிழ்ச்சியடைய முடியாதபடி, அடுத்தடுத்து வேலை நிறுத்த அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.

சம்பள மறுசீரமைப்பின்படி, உயரதிகாரிகளுக்கு மட்டுமே சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கூறி, இலங்கை மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று (13) மூன்றாவது நாளை எட்டியுள்ளது.

மருத்துவ மற்றும் போனஸ் கொடுப்பனவுகளும் நிறுத்தப்பட்டிருப்பதாகக் கூறும் மின்சார சபை ஊழியர்கள், தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வேலை நிறுத்தத்தில் குதிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, திருகோணமலை எண்ணெய் குதத்தை இந்தியாவுக்கு வழங்குவதை எதிர்த்து, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய தொழிற்சங்கங்கள் இணைந்து வேலை நிறுத்தத்தில் இறங்கப் போவதாகத் தெரிவித்துள்ளன.

இந்த வேலை நிறுத்தம் குறித்து அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் வேலை நிறுத்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தெரியவருகிறது.

இந்நிலையில், பயிற்சி மருத்துவர்களைப் பணியில் இணைத்துக்கொள்வது குறித்த பிரச்சினையை முன்வைத்து, கிண்ணியா அரச வைத்தியசாலை மருத்துவர்கள் நேற்று (12) வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.

அவர்களுடன் மூதூர் அரச வைத்தியசாலையின் மருத்துவர்களும் இன்று இணைந்துகொண்டுள்ளனர்.

இவர்களுடன், திருகோணமலையின் அனைத்து வைத்தியசாலைகளின் மருத்துவர்களும் நாளை (14) முதல் வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.