சமூக விடயங்களுக்கு ஆதரவு  தரும் வகையில் செயல்பட்டதற்காக அவருக்கு இந்த அன்னை தெரசா நினைவு விருது பிரியங்கா சோப்ராவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் போரினால் சீரழிந்துள்ள சிரியா நாட்டுக்கு சென்று அங்கு அகதிகளாக உள்ள குழந்தைகளை சந்தித்து அவர்களிடம் உரையாடினார்.

பல்வேறு பொதுநல நடவடிக்கைகளிலும் ஈடுபட்டவர் என அறியப்படும் பிரியங்கா சோப்ரா யுனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதராகவும் உள்ளார். இவ் விருதினை அவருக்கு பதிலாக அவரது தாயார் மது சோப்ரா பெற்று  கொண்டுள்ளார்.

 இவ் விருது பெறும் விழாவில் அவரது தாயார் கூறுகையில்,

"பிரியங்காவுக்கு பதிலாக இந்த விருதினை பணிவுடன் ஏற்று கொள்கிறேன். அதிக இரக்கம் மற்றும் கருணை தன்மை கொண்டுள்ள ஒரு குழந்தையை பெற்றதற்காக நான் நிறைந்த பெருமை கொள்கிறேன்.

நீங்கள் எவ்வளவு கொடுக்கிறீர்களோ அந்த அளவிற்கு பெறுவீர்கள் என்ற உண்மைக்கு எடுத்துக்காட்டாக அவள் இருக்கிறாள். அவள் ஒரு குழந்தையாக இருந்தபொழுதும் அன்னை தெரசாவால் ஈர்க்கப்பட்டு இருக்கிறாள்.

அவள் பரேலியில் உள்ள பிரேம் நிவாஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து வருகிறாள்.

தேவையானவர்களுக்கு உதவி செய்வது, ஏழைகளுக்கு ஆதரவு வழங்குவது மற்றும் வறிய நிலையில் உள்ளவர்களுக்கு நிதி திரட்டுவது போன்றவற்றில் நம்பிக்கை கொண்டுள்ள இந்த அமைப்பு பிரியங்காவின் முயற்சிகளை அங்கீகரித்திருப்பதற்காக நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் கிரண் பேடி, அன்னா ஹசாரே, ஆஸ்கர் பெர்னாண்டஸ், சுதா மூர்த்தி, மலாலா யூசப்சை, சுஷ்மிதா சென் மற்றும் பில்கீஸ் பனோ எதி ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.