தொழிற்சங்க நடவடிக்கையைக் கைவிடுவதா, இல்லையா என்பதை ரயில்வே ஊழியர்கள் நாளை (13) தீர்மானிக்கவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வேயின் பதின்மூன்று தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், வேலைநிறுத்தம் குறித்து ஆராயவென அமர்த்தப்பட்டிருக்கும் அமைச்சர் குழுவினரோடு ரயில்வே ஊழியர்கள் நாளை பேச்சுவார்த்தை ஒன்றில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்தப் பேச்சுவார்த்தையின் பின்னரே வேலைநிறுத்தத்தை கைவிடுவதா, இல்லையா என்பதை முடிவுசெய்யவிருப்பதாக ரயில்வே ஊழியர் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஒப்பந்த அடிப்படையில் ரயில்வேயில் பணியாற்றும் ஊழியர்கள் நாளை பணிக்குத் திரும்பாதவிடத்து, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவர்கள் வேலை நீக்கம் செய்யப்படவுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.