சாகச நிகழ்வொன்றின்போது 62ஆவது மாடியில் இருந்து விழுந்த வீரர் உயிரிழந்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 7ஆம் திகதி இந்த விபத்து ஏற்பட்டபோதும் உத்தியோகபூர்வமாக ஒரு சில நாட்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டது.

வூ யோங்னிங் (26) ஒரு சாகச வீரர். சினிமாவில் தலைகாட்டிய இவர் தற்காப்பு முறையை முறையாகப் பயின்றவர். சீனாவில், ட்விட்டருக்கு இணையான சமூக வலைதளான வெய்போவில் தனது சாகசங்களை தரவேற்ற ஆரம்பித்த இவர், குறுகிய காலத்தில் சீனாவின் ‘சுப்பர் மேன்‘ என்று புகழப்படத் தொடங்கினார்.

உயரமான கட்டடங்கள் மற்றும் பாலங்களில் எவ்வித பாதுகாப்பும் இன்றி சாகசங்களைச் செய்வது இவரது வழக்கம்.

இந்நிலையில், நவம்பர் 7ஆம் திகதி ‘சாங்ஸா’ என்ற கட்டடத்தில் எவ்வித பாதுகாப்பும் இன்றி சாகசம் நிகழ்த்திக்கொண்டிருந்தார். அப்போது பிடிமானம் தவறியதால் 62 மாடியில் இருந்து வூ கீழே விழுந்தார்.

இது பற்றிய செய்தி அப்போதே வெளிவந்தபோதும் வூ மரணத்தைத் தழுவியது கடந்த வாரமே உறுதிப்படுத்தப்பட்டது. 

இதையடுத்து, அவரது இறுதி சாகசத்தின்போது பதிவுசெய்யப்பட்ட காணொளியை வூவின் காதலி கடந்த வாரம் வெளியிட்டார்.

தமது திருமணத்தை நடத்தவும், வூவின் தாயாராது மருத்துவச் செலவுகளுக்காகவும் பதினையாயிரம் அமெரிக்க டொலர் பந்தயப் பணத்தைக் குறிவைத்தே அவர் சாகசம் நிகழ்த்த முயன்றதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.