கௌரவக் கொலையுடன் சம்பந்தப்பட்ட ஆறு பேருக்கு சென்னை நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. 

பொறியியல் கல்லூரியின் மூன்றாமாண்டு தலித் மாணவர் சங்கர். தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர் கௌசல்யா. இருவரும் வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்துகொண்டனர். 

திருப்பூரில் வாழ்ந்து வந்த இவர்கள் மீது, கடந்த வருடம் மார்ச் மாதம் பட்டப் பகலில், மக்கள் நிறைந்த சந்தைப் பகுதியில் கத்தி மற்றும் வாள்களால் கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. சங்கர் உயிரிழக்க, நீண்டகால சிகிச்சையின் பின் கௌசல்யா உயிர் பிழைத்தார்.

இதில் சந்தேக நபர்களாகக் கைது செய்யப்பட்ட கௌசல்யாவின் தந்தை உட்பட கூலிப்படையினர் ஐந்து பேரும் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர். இதையடுத்து அவர்களுக்கு மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தலைமறைவாகியுள்ள கௌசல்யாவின் தாய் மற்றும் தாய்மாமன் இருவர் மீதுமான தேடுதல் நடவடிக்கைகள் இன்னும் நடைபெற்றுவருகின்றன.

திருமணமாகி எட்டே மாதத்தில் கணவனைப் பறிகொடுத்த கௌசல்யா தற்போது தனது கணவரின் பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார்.

தீர்ப்பு குறித்து கருத்துத் தெரிவித்த கௌசல்யா, தனது தந்தைக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது குறித்து மகிழ்ச்சியடைவதாகக் கூறியுள்ளார். எனினும் தலைமறைவாகியுள்ள தனது தாய் மற்றும் தாய்மாமன் ஆகியோரால் தனக்கோ, கொல்லப்பட்ட தன் கணவரின் பெற்றோருக்கோ ஆபத்து ஏற்படலாம் என்று அச்சப்படுவதாகவும் அவர்கள் கைதாகும்வரை தமக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.