சீனாவில் யுனான் மாகாணத்தின் சங்ஷா பகுதியிலுள்ள 62 ஆவது மாடியில் ஏறும் சாகச முயற்சியில் ஈடுபட்ட சாகச வீரர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாகசத்தில் ஈடுபட்ட போது தவறி விழுந்து உயிரிழந்தவர் வூ யாங்னிங் என்ற சாகச வீரர் ஆவார்.

ஏராளமானோரை ஈர்த்த வூ யாங்னிங்கின் யூ டியுப் பக்கத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சாகச வீடியோக்கள் ஏதும் பகிரப்படாததால் ரசிகர்களுக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் சாகச நிகழ்ச்சியின் போது அவர் தவறி விழுந்து உயிரிழந்ததை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

1 லட்சம் யென் பரிசுத் தொகைக் கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில் அவர் தவறி விழுந்து உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

வூ யாங்னிங்கின் குடும்பம் வறுமையில் வாடி வந்ததாகவும், நோயுற்றிருந்த அவரது தாயாரின் சிகிச்சைக்காகவும், காதலியை மணம் முடிப்பதற்கான செலவுக்கு பயன்படும் என்பதாலும் அவர் 62 ஆவது மாடியில் சாகசத்தில் ஈடுபட முடிவெடுத்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

நிகழ்ச்சியில் வெற்றி பெற்று, வெற்றித்தொகையுடன் வந்து காதலியிடன் தனது காதலைச் சொல்லி திருமணத்திற்கு ஒப்புதல் பெற வூ யாங்னிங் திட்டமிட்டிருந்ததை குறிப்பிட்டு வேதனை தெரிவித்துள்ள அவரது குடும்பத்தினர் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டதாலேயே வூ யாங்னிங் உயிரிழந்ததாக குற்றம்சாட்டியுள்ளனர்.