மட்டக்களப்பில் கொக்குத் தீவு என அழைக்கப்படும் சுற்றுலா பயணிகளை கவரும் இடமாகவுள்ள பறவைகள் சரணாலயம் இனம் தெரியாத விசமிகளால் தீயிட்டு நாசமாக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு முகத்துவாரம், பாலமீன்மடு கடற்கரையை அண்மித்த பகுதியில் கொக்குத்தீவு என அழைக்கப்படும் பறவைகள் சரணாலயம் இனம் தெரியாத விசாமிகளால் தீயிட்டு நாசமாக்கப்பட்டுள்ளது.

தீவுப்பகுதியில் தீப்பற்றி எரிந்ததை அவதானித்த அப்பகுதி மக்கள் உடன் லைட் ஹவுஸ் கழக உறுப்பினர்களுக்கு அறிவித்ததையடுத்து, தொடர்ந்து கழக உறுப்பினர்களினால் சம்பவம் தொடர்பில் பாலமீன்மடு பொலிஸ் காவலரண் பொலிசாருக்கும், கரையோர பேணல் திணைக்களத்திற்கும் , மாநகர சபை தீ அணைப்பு பிரிவு , கிராம அபிவிருத்தி சங்கம் , கிராமிய மீனவ சங்கம் , கிராம சேவை உத்தியோகத்தர் , ஆகியோருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, சம்பவம்  இடம்பெற்ற  தீவு பகுதிக்கு  சென்றவர்கள்  தீயினை அணைத்து கட்டுப்பாட்டுக்குள்  கொண்டு வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பறவைகள் சரணாலயத்திற்கு அதிகளவிலான அரிய வகை வெளிநாட்டுப் பறவைகள் வந்து  செல்வதாகவும், குறிப்பாக நவம்பர், டிசம்பர் காலப்பகுதியில் அதிகளவிலான பறவைகள் வந்து முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்வதாகவும் தெரிவிக்கின்றனர்.

குறித்த தீ விபத்தினால்  இனப்பெருகத்திற்காக பறவைகள் இட்ட முட்டைகளும் ,அதன் குஞ்சுகளும்  தீயில் கருகியுள்ளன.

தீ வைப்பு தொடர்பான விசாரணைகளை கரையோர பேணல் திணைக்களமும் , மட்டக்களப்பு பொலிசாரும் மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.