இந்திய பிரஜை ஒருவரை துப்பாக்கிச் சூட்டில் இருந்து காப்பதற்காக குண்டடி பட்ட அமெரிக்கரை டைம்ஸ் இதழ் கௌரவித்துள்ளது.

அமெரிக்காவின் கான்சாஸ் நகரில் உள்ள மதுவிடுதியில் நுழைந்த முன்னாள் கடற்படை வீரர் ஆடம் பியூரிண்டன் அங்கிருந்த இந்தியர்களின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். "என் நாட்டை விட்டு வெளியேறுங்கள்" எனக்கூறிக் கொண்டே அவர் துப்பாக்கியை இயக்கியபோது அதே இடத்தில் இருந்த இயன் கிரில்லாட் எனும் இளைஞர் குறுக்கே புகுந்து இந்திய பிரஜையை காப்பாற்றியுள்ளார்.

இந்தத் தாக்குதலில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் கொல்லப்பட்டார். அலோக் மடசானி என்பவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த நிறவெறித் தாக்குதலுக்கு முற்றிலும் தொடர்பில்லாத இயன் கிரில்லாட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவரைக் கௌரவிக்கும் வகையில் கட்டுரை வெளியிட்டுள்ள டைம்ஸ் இதழ், "2017ஆம் ஆண்டில் நமக்கு நம்பிக்கை அளித்த ஐந்து நபர்களில் ஒருவர்" எனவும் பெருமைப் படுத்தியுள்ளது.

மேலும் அந்தக் கட்டுரையில் பேட்டியளித்துள்ள இயன் கிரில்லாட் "நான் அதைச் செய்யாமல் இருந்திருந்தால் நானாகவே நான் இருந்திருக்கமாட்டேன். அனைவரின் பிரார்த்தனைகளாலும் அன்பினாலும் மட்டுமே நான் இப்போது பிழைத்திருக்கிறேன். இது வாழ்ந்திருப்பதற்கான அற்புதமான வருடம்" என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் கான்சாஸ் பகுதியில் அமெரிக்க - இந்திய அமைப்பினர் இயன் கிரில்லாட் சொந்தமாக வீடு வாங்க ஒரு லட்சம் டாலர்கள் பரிசாக வழங்கி மகிழ்வித்தது குறிப்பிடத்தக்கது.