அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் சிங்கப்பூரில் மென்பந்து கிரிக்கெட் போட்டியொன்றை நடத்தியுள்ளது.

 

சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) நேற்று மாலை (10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை)  டர்ப் கிளப் சாலையில் அமைந்திருக்கும் சிங்கப்பூரின் முதன்மையான உள்விளையாட்டரங்கு துடுப்பாட்ட மைதானத்தில் மென்பந்து துடுப்பாட்டப் போட்டியை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

இதில் ஆண்டு வாரியாக முன்னாள் மாணவர்கள் கொண்ட 10 அணிகள், அணிக்கு 6 வீரர்கள் வீதம் 60 விளையாட்டு வீரர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் உட்பட 50 க்கும் அதிகமான உறுப்பினர்கள் பார்வையாளர்களாகவும் மொத்தம் 100 க்கும் அதிகமானோர் பங்குகொண்டு சிறப்பித்து இப்போட்டியினை கண்டுகளித்து மகிழ்ந்தனர்.

 

இப்போட்டியில் முதலாவது இடத்தை  ராமநாதன் முன்னாள் மாணவர்கள் அணி சூடிக்கொண்டது. இரண்டாம் இடத்தை சுந்தரபாண்டியன் அணியினர் தம் வசப்படுத்திக் கொண்டனர். 

இதில் ஆட்ட நாயகன் விருதை அழகப்பன் மற்றும் தொடர் நாயகன் விருதை சுந்தரபாண்டியன் தட்டிச்சென்றனர்.

 

முன்னதாக இளைஞர் குழுத் தலைவர் நெடுஞ்செழியன் பேசுகையில்,

இச்சங்கம் பல மூத்த உறுப்பினர்களை கொண்டாலும் இளைஞர்களுக்கான நிகழ்ச்சிகளுக்கு முன்னுரிமைகள் கொடுக்கப்படும். 

அதனை மனதில் கொண்டு இச்சங்கம் ஆண்டுதோறும் துடுப்பாட்டம் முற்றும் பூப்பந்தாட்டம் ஆகிய விளையாட்டு போட்டிகளை உறுப்பினர்களுக்கு ஏற்பாடு செய்துவருகிறது.

 

இந்த போட்டியினை செயலாளர் சங்கர் ராமாதாஸ், இளைஞர் குழு தலைவர் நெடுஞ்செழியன், இளைஞர் குழு ஆலோசகர் கருணாநிதி மற்றும் ஏற்பாட்டு குழுத் தலைவர் இளங்கோ சுரேஷ் உடன் குழு உறுப்பினர்கள் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

 

அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் சிங்கப்பூரில் கடந்த 1998 ஆம் ஆண்டு உத்தியோகபூர்வமாக நிறுவப்பெற்றது. 

இந்த அமைப்பு ஆண்டு தோறும் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. இது தற்போது 750 உறுப்பினர்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.