பணியாளர்கள் தமது வேலையை இழந்தவர்களாகக் கருதப்படுவார்கள் என்று போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தபோதும் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தைக் கைவிடுவதாக இல்லை.

“ரயில்வே ஊழியர்களின் சர்வ சாதாரணமாக வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர். இது மிகவும் ஆபத்தான ஒரு சூழல். பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சின் செயலாளர் டி.எஸ்.விதானகே தெரிவித்துள்ளார்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் பணிக்குத் திரும்புவதற்கு நாளை (11) திங்கட்கிழமை வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எனவும் அதற்குள் வேலைக்குத் திரும்பாதவர்களை பணி நீக்கம் செய்ய பொறுப்பதிகாரிகள் முடிவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் இந்திக ருவன் பத்திரண தெரிவிக்கும்போது, தற்போது 2,000 ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், இந்த எண்ணிக்கை நாளை பத்தாயிரமாக மாறும் என்றும் எச்சரித்துள்ளார்.

“எங்களை பணியை விட்டு விலக்கும் அமைச்சின் முடிவை வரவேற்கிறோம். ஆனால் அரசு அப்படிச் செய்யுமானால் ரயில்வே திணைக்களத்தை இழுத்து மூட வேண்டிவரும்” என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.