வவுனியா - ஓமந்தை அலகல்லு போட்டகுளத்தில் 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சம்பவத்துடன் தொடர்புபட்ட ஆசிரியருக்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், சமூகத்தில் இனி இவ்வாறு இடம்பெறக்கூடாது என்றும் தெரிவித்து நொச்சிக்குளம் மகளிர் கிராம அபிவிருத்திச்சங்கத்தினால் இன்று காலை 9.30 மணியளவில் விழிப்புணர்வுப் பேரணி ஒன்று இடம்பெற்றது.

ஓமந்தை ஆரம்ப மருத்துவப் பராமரிப்பு பிரிவிற்கு முன்பாக ஒன்றிணைந்த மகளிர் அமைப்பினர் பிரதான ஏ9 வீதியூடாக ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு பேரணியாகச் சென்று ஓமந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் மகஜர் ஒன்றினைக் கையளித்துள்ளனர்.

இப்பேரணியில் கலந்துகொண்டவர்கள் "இருப்பவர்கள் இருந்தால் இப்படி நடந்திருக்குமா?", "சிறுமியை பலாத்காரம் புரிந்தவருக்கு தண்டனை வழங்கு", "இதற்கு உடந்தையாக இருந்த தாயார் மீது நடவடிக்கை மேற்கொள்" போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு பேரணியில் கலந்துகொண்டனர்.

குறித்த ஆசிரியர் முன்னர் கற்பித்த 10ற்கும் மேற்பட்ட பாடசாலைகளிலும் சிறுவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு சாட்டப்பட்டு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக நொச்சிக்குளம் மகளிர் கிராம அபிவிருத்திச்சங்கத்தினர் குற்றசாட்டினை முன்வைத்துள்ளனர்.

சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தியுள்ளதாகவும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டு சட்டநடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் ஓமந்தைப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இவ் விழிப்புணர்வுப் பேரணியில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் இணைப்பு செயலாளர் சு.சுதாகரன்  முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் ஆகியோரும் ஆதரவு வழங்கியிருந்தனர். ‌