இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான ரஸல் ஆர்னல்ட் தனது கவனமின்மையால் ட்விட்டர் வலைதளத்தில் கேலிக்கு இலக்காகியிருக்கிறார்.

இலங்கை-இந்திய அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து ரஸல் ஆர்னல்ட் தனது ட்விட்டர் கணக்கில் ஒரு பதிவை இட்டிருந்தார்.

அதில், “ஆகவே, டெஸ்ட் தொடர் 1-0 என்ற கணக்கில் நிறைவடைந்திருக்கிறது. ஆனால், ஒருநாள் தொடர் சில மாதங்களுக்கு முன் முடிவடைந்ததைப் போல 5-0 என்ற கணக்கில் நிறைவடையாது என்பதை நான் உறுதியாகச் சொல்லிக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

உண்மையில், இலங்கை-இந்திய அணிகளுக்கிடையில் மூன்று ஒருநாள் போட்டிகளே நடைபெறவுள்ளன. 

இதற்கு ட்விட்டரில் பதிலளித்திருந்த இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான வி.வி.எஸ்.லக்ஷ்மன், “நிச்சயமாக ரஸல்! மூன்று போட்டிகள் அடங்கிய தொடரில் இப்படி நடக்க வாய்ப்பேயில்லை. நிச்சயம் உங்களது எதிர்வுகூறல் சரியாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, இந்திய இரசிகர்கள் பலரும் ரஸலின் பதிவை கிண்டலடித்து வருகிறார்கள்.