வானியல் நிபுணர்கள் தொலைதூரத்தில் உள்ள மிக அதிக எடை கொண்ட கருந்துளை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

இக்  கருந்துளை வியத்தகு 13 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. ஆனால் சூரியனின் எடையை விட 800 மில்லியன் மடங்கு எடை கொண்ட இக் கருந்துளை பிரபஞ்சம் தோன்றியதற்குப் பிறகு இத்தகைய மிகப்பெரிய அளவை குறுகிய நாட்களில் எட்டியுள்ளது விஞ்ஞானிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இக் கருந்துளை ஒரு நட்சத்திர மண்டலத்தின் மையத்தில் இருந்துகொண்டு தன்னை அண்மிக்கும் பொருள்களை கவர்ந்து கொள்வதால் இக் கருந்துளை குவாசர் என்று அழைக்கப்படுகிறது.

'' குவாசர் மிகவும் பிரகாசமான மற்றும் அதிக தொலைவில் உள்ள விண்பொருள்களில் ஒன்றாகும். அவை பிரபஞ்சத்தின் தொடக்கத்தைப் புரிந்துகொள்ள மிகவும் முக்கியமான ஒன்றாகும்'' என்று ஜெர்மனியில் உள்ள மாக்ஸ் பிளாங்க் வானியல் நிறுவனத்தைச் சேர்ந்த  ஆசிரியர் ப்ராம் வெனிமன்ஸ் கூறியுள்ளார்.

குவாசரின் தொலைவானது "ரெட்ஷிப்ட்" என்னும் ஒரு அளவுகோல் மூலம் அளவிடப்படுகிறது. பேரண்டம் விரிவடைவதன் காரணமாக குவாசரின் ஒளியின் அலை நீளம் புவியை அடைவதற்கு முன்பு எந்த அளவு இழுபட்டுள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த ரெட் ஷிப்ட் மதிப்பிடப்படுகிறது. புதிதாக கண்டுபிடித்த கருந்துளை 7.54 ரெட்ஷிப்ட் அளவைக் கொண்டுள்ளது.

எந்த அளவிற்கு ரெட்ஷிப்ட் அதிகமாக இருக்கின்றதோ அந்த அளவிற்கு அதன் தொலைவும் அதிகமாக இருக்கும்.

இந்த கண்டுபிடிப்பிற்கு முன்பு அதிக தொலைவுள்ள குவாசராக அறியப்பட்டது பிரபஞ்சம் தோன்றி 800 மில்லியன் ஆண்டுகள் ஆன பொழுது தோன்றியது.

விரிவான ஆராய்ச்சிகள் செய்யப்பட்ட போதும் இவ்வளவு தூரத்தில் உள்ள ஒரு பொருளை காண்பதற்கு ஐந்தாண்டு காலம் ஆகியிருக்கிறது. என்றும் இந்த பிரமாண்ட கருந்துளை உருவாவதற்கான செயல்முறை ஒன்று பேரண்டத்தின் ஆரம்பகாலத்தில் இருந்திருக்கிறது என்று கூறுகிறார்  ஆசிரியர் எடுராடோ பனாதோஸ்.

எதிர்பாராத இந்த கண்டுபிடிப்பு உலகெங்கிலும் உள்ள பல்வேறு ஆய்வுமையங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பிற்கு உதவிய பலவற்றில் ஹவாயின் ஜெமினி வடக்கு தொலைநோக்கி மையமும், நாசாவின் வைட் ஃபீல்டு அகச்சிவப்பு ஆய்வுத் தொலைநோக்கியும் முக்கியமானவை ஆகும்.