எந்தவொரு அரசியல் கட்சியையும் உடைக்கும் எண்ணம் ஐ.தே.க.விடம் இல்லை என்று, அக்கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாஷிம் தெரிவித்தார். கொழும்பில் இன்று (8) நடைபெற்ற சந்திப்பொன்றில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

‘ஜனாதிபதி மைத்ரிபாலவுடன் மஹிந்த ராஜபக்ச இணைவதை ஐ.தே.க. விரும்பவில்லையா?’ என்று அவ்வூடகவியலாளர் கேள்வி எழுப்பியிருந்தார்.

“நாட்டில் ஜனநாயக கட்டமைப்பொன்றை உருவாக்கும் முயற்சியில் ஐ.தே.க. இறங்கியுள்ளது. அதைக் கட்டிக் காப்பதற்கு ஐ.தே.க.வின் உறுப்பினர்கள் உறுதிபூண்டும் உள்ளனர்.

“எந்தவொரு அரசியல் கட்சியையும் பிளவுபடுத்தும் தேவை ஐ.தே.க.வுக்கு இல்லை. மாறாக, எல்லோரும் ஒன்றிணைந்து ஒரு சிறந்த அரசை உருவாக்க வேண்டும் என்பதே எமது எண்ணம்.

“ஐ.தே.க.வும் ஸ்ரீல.சு.க.வும் இணைவது சிரமம் என்றாலும் இரு கட்சிகளிடையேயும் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரு சாராரும் ஒரே அடையாளத்தின் கீழ் இருந்து பணியாற்றி வருகின்றனர்.”

இவ்வாறு கபீர் ஹாஷிம் தெரிவித்தார்.