இந்த ஆண்டில் நாட்டின் மொத்த தேசிய உற்­பத்தி நூறு பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­க­ளாக காணப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­துடன் தனி­நபர் வரு­மானம் நான்­கா­யிரம் டொலர்­க­ளாக உயர்ச்­சி­ காணும் சாத்தி­யமும் உள்­ள­தாக அமைச்சர் மஹிந்த அம­ர­வீர தெரி­வித்தார். அடுத்த ஐந்­தாண்டு காலத்­தினுள் மூன்று பில்­லியன் அமெ­ரிக்க டொலர் பெறு­ம­தி­யான நேரடி வெளி­நாட்டு முத­லீ­டு­களை பெற்­றுக்­கொள்­ளவும் எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கருத்து வெளி­யி­டு­கையில்,

யுத்தம் முடி­வுக்கு வந்­ததில் இருந்து நாட்டின் மொத்த தேசிய உற்­பத்தி மிக நல்­ல­தொரு நிலையில் கையா­ளப்­பட்டு வரு­கின்­றது. எனினும் இந்த ஆண்டில் நாட்டின் மொத்த தேசிய உற்­பத்தி நூறு பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­க­ளாக காணப்­படும் என அர­சாங்கம் எதிர்­பார்க்­கின்­றது.

கடந்த ஆண்டு நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்சி 5 தொடக்கம் 6 வீதத்தில் தான் இருந்­தது. 3.3 வீத­மான பண வீக்­கத்தை தனி ஒற்றை இலக்­க­மாக மாற்றும் முயற்­சியை இந்த அர­சாங்கம் முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

மொத்த தேசிய உற்­பத்­தியில் சேவை­துறை பாரிய பங்­கினை வகிக்­கின்­றது. உள்­நாட்டு யுத்தம் முடி­வுக்கு வந்த பின்னர் நாட்டின் சுற்­றுலா துறை உள்­ளிட்ட சேவை துறை பாரிய அள­வி­லான முன்­னேற்­றத்தை கண்­டுள்­ளது. கடந்த ஜன­வரி­ மாதம் தொடக்கம் ஒக்­டோபர் மாதம் வரை­யி­லான காலப் பகு­தியில் சுற்­றுலா பய­ணி­களின் எண்­ணிக்கை 1.5 மில்­லி­ய­னாக அதி­க­ரித்து வரு­மானம் 2.3 பில்­லி­ய­னாக பதி­வா­கி­யுள்­ளது.

மேலும் இந்த ஆண்­டில் சுற்­றுலா கைத்­தொழில் துறைசார் தொழில் வைப்­புக்­களை ஐந்து இலட்சம் வரை அதி­க­ரிக்க எதிர்­பார்த்­துள்­ள­துடன் இத்­து­றைசார் உற்­பத்தி பல்­வ­கைப்­ப­டுத்­தலின் ஊடாக மொத்த தேசிய உற்­பத்­தியில் 1.6 சத­வீதம் வரை­யி­லான பங்­க­ளிப்பை வழங்­கவும் எதிர்­பார்க்­கப்­பட்­டுள்­ளது. எதிர்­வரும் ஐந்­தாண்டு காலத்­தினுள் மூன்று பில்­லியன் அமெ­ரிக்க டொலர் பெறு­ம­தி­யான நேரடி வெளி­நாட்டு முத­லீடு­களை பெற்­றுக்­கொள்­ளவும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

அதேபோல் மொத்த தேசிய உற்­பத்­தியில் 75.5 வீதம் கடன் தொகையின் வீத­மாகும். இப்­போது நாட்டின் மொத்த கடன் தொகை­யா­னது 57 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­க­ளாகும். ஆகவே நாட்டின் அபி­வி­ருத்தி மற்றும் உள்­நாட்டு உற்­பத்­தியை பல­மான வகையில் கையாள வேண்­டு­மாயின் இப்­போ­தி­ருக்கும் அர­சியல் சூழலை இன்னும் சில ஆண்­டு­க­ளுக்கு கொண்டுசெல்ல வேண்டிய தேவை உள்ளது. பிரதான இரண்டு கட்சிகளினதும் பூரண ஒத்துழைப்பு இன்று நாட்டின் உள்நாட்டு உற்பத்திக்கு பாரிய பலமாக உள்ளதால் அதை தக்கவைக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.