அமெரிக்காவிலிருந்து வெளியாகும் உலகப் புகழ் பெற்ற பத்திரிக்கையான ‘டைம்’ வார இதழ் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அந்த ஆண்டிற்கான உலகின் சிறந்த மனிதர் என்ற கௌரவத்தை வழங்கி, தனது இதழின் அட்டைப் படத்திலும் அந்த நபரின் புகைப்படத்தை வெளியிட்டு டைம் பத்திரிக்கை கௌரவப்படுத்தும்.

அந்த வகையில் இந்த ஆண்டின் சிறந்த மனிதராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற ஆரூடங்கள் கடந்த சில நாட்களாகவே உலவி வந்தன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற செய்திகளும் பரவியது, அதற்காக கடும் எதிர்ப்புகளும் பதிவு செய்யப்பட்டன.

இறுதியாக 2017ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த மனிதர் கௌரவத்தைப் பெறுபவர்களை டைம் பத்திரிக்கை அறிவித்துள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்பே தங்களுக்கு பல வகைகளில் பாலியல் கொடுமைகள் நிகழ்ந்திருந்தாலும், அதை ஏதோ சில காரணங்களால் தங்கள் மனங்களுக்குள் பூட்டி வைத்து, புழுங்கிக் கொண்டிருந்த சில பெண்கள், வரிசையாக முன்வந்து தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைப் பகிரங்கமாக அறிவித்தார்கள்.

அதன் காரணமாக சில ஹாலிவுட் நடிகர்களின் முகத்திரைகள் கிழிந்தன. சிலர் தலைகுனியும் நிலைமை ஏற்பட்டது. சில ஹாலிவுட் பிரபலங்களே இப்படியா நடந்து கொள்வார்கள் என உலகமே வியந்தது. சிலர் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டனர்.

முன்னாள் அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் கூட 90 வயதை தாண்டிய நிலையில் தனது கடந்த காலத் தவறு ஒன்றுக்காக மன்னிப்பு கேட்க வேண்டிய நெருக்குதல் ஏற்பட்டது.

இவ்வாறு தங்களின் உள்ளக் கிடக்கையாக ஆண்டாண்டுகாலமாக உள்ளே உறைந்து கிடந்த கசப்பான உண்மைகளை காலங்கடந்தாவது துணிந்து வெளியிட்டு, உலகின் கவனத்தை ஈர்த்த, பல பெரிய புள்ளிகளின் இருட்டுப் பக்கங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த, பாலியல் கொடுமைக்கு ஆளான பெண்களை 2017ஆம் ஆண்டிற்கான  சிறந்த மனிதர்களாக டைம் பத்திரிக்கை அறிவித்துள்ளது.

அவர்களை ‘மௌனத்தை உடைத்தவர்கள்’ (Silence breakers) என்று வர்ணித்து அவர்களுக்கு புகழாரமும் சூட்டியிருக்கிறது டைம் பத்திரிக்கை.