ஒவ்­வொரு தொட­ருக்கும் ஒவ்­வொரு அணித் தலை­வரை நிய­மிக்கும் இலங்கைக் கிரிக்கெட் நிறு­வ­னத்தின் திட்­டத்தை ஏற்றுக் கொள்ள முடி­யாது என்று விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்­துள்ளார்.

அத்­தோடு எதிர்­வரும் 2019ஆம் ஆண்­டு­வரை திஸர பெரே­ராவே தலை­வ­ராக நீடிப்பார் என்றும் அவர் தலை­மை­யி­லான உலகக் கிண்ண அணியை உரு­வாக்­க­வேண்டும் என்றும் அவர் தெரி­வித்­துள்ளார்.

இலங்கைக் கிரிக்கெட் அணி தற்­போது கடும் பின்­ன­டைவை சந்­தித்து வரு­கி­றது. அடுத்­த­டுத்த பல தோல்­வி­களால் அணி ஆட்டம் கண்­டுள்­ளது.

இந்­நி­லையில் இலங்கை அணியின் மூன்­று­வகை கிரிக்கெட் போட்­டி­க­ளுக்கும் தலை­வ­ராக இருந்த அஞ்­சலோ மெத்­தியூஸ் வில­கிய நிலையில், டெஸ்ட் போட்­டி­க­ளுக்கு சந்­தி­மா­லையும், ஒருநாள் போட்­டி­க­ளுக்கு உபுல் தரங்­க­வையும் நிய­மித்­தது அப்­போ­தைய சனத் ஜய­சூ­ரிய தலை­மை­யி­லான தேர்­வுக்­குழு.

அதன்­பி­றகு நடை­பெற்ற தொடர்­களில் அடுத்­த­டுத்த தோல்­வி­களைக் கண்­டு­வந்த உபுல் தரங்க தலை­மை­யி­லான இலங்கை அணி, பாகிஸ்­தானில் சென்று விளை­யாட மறுத்த நிலையில் இரு­ப­துக்கு 20 தொட­ருக்கு திஸர பெரேரா தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்டார்.

அதன்­பி­றகு தற்­போது இந்­தி­யா­வுடன் நடை­பெ­ற­வுள்ள ஒருநாள் தொட­ருக்­கான இலங்கை அணித் தலை­மையில் மாற்றம் வரும் என்று தெரி­விக்­கப்­பட்­டு­வந்­தது. இந்­த­ நி­லையில் திஸர பெரே­ராவை ஒருநாள் அணிக்கு தலை­வ­ராக அறி­வித்­தது தற்­போ­துள்ள லப்ரோய் தலை­மை­யி­லான தேர்­வுக்­குழு.

இலங் கைத் தலை­வரை அறி­விக்கும் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­வித்த இலங்கைக் கிரிக்கெட் நிறு­வ­னத்தின் பிர­தம செயற்­பாட்டு அதி­கா­ரி­யான ஆஷ்லி டி சில்வா, இனி ஒவ்­வொரு தொடருக்கும் ஒவ்­வொரு தலைவர் நிய­மிக்­கப்­ப­டுவார் என்றும் அந்தத் தொடரின் பெறு­பே­று­களை வைத்தே அவர் தொடர்ந்து தலை­வ­ராக நீடிப்­பாரா இல்­லையா என்­பதை முடி­வு­செய்வோம் என்றும் அறி­வித்தார்.

இந்­நி­லையில் இந்தத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ணம் வரை திஸர பெரேராவே  தலைவராக நீடிப்பார் என்றும் தெரிவித் துள்ளார்.