ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசமைக்கவும் தாம் தயாராக இருப்பதாக கூட்டு எதிரணி தெரிவித்துள்ளது.

கூட்டு எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று (7) மாலை கொழும்பில் நடைபெற்றது. இதில், கூட்டு எதிரணியின் தலைவர் உள்ளிட்ட பிரதான உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

தலைவர் ஜீ.எல்.பீரிஸ் பேசும்போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைவதற்காக தாம் அக்கட்சியுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியதாகத் தெரிவித்தார். ஏனெனில், அதைவிடத் தமக்கு வேறெந்தத் தெரிவும் இருக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

அவரையடுத்துப் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஐக்கிய தேசியக் கட்சி விரும்பினால் அவர்களுடன் இணைந்து அரசு ஒன்றை அமைக்கவும் தாம் விரும்புவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான விசேட திருத்தச் சட்டப் பிரேரணையில் வேறெந்த மாற்றங்களையும் செய்யக் கூடாது என்று கூட்டு எதிரணியினர் சபாநாயகருக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

தற்போதைய பிரேரணையின் அம்சங்களில் புதிய மாற்றங்களைக் கொண்டு வர பாராளுமன்ற உறுப்பினர் ஃபைசர் முஸ்தபா முயற்சிப்பதாகவும் அதற்கு சபாநாயகர் இடமளிக்கக்கூடாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.