இன்றைய உலகம் இலத்திரனியல் உலகமயமாகிவிட்டது. பாமரர் முதல் பணக்காரர் வரை கைப்பேசி, மடிக்கணினி, சார்ஜர், பவர் பாங்க், ஹேண்ட்ஸ் ப்ரீ போன்ற உபகரணங்களுடன் தான் பயணப்படுகிறோம். இவைகள் இல்லாவிட்டால் விரக்தியடையும் அடையும் நிலையில் இன்றைய இளையத்தலைமுறையினர் இருக்கிறார்கள். இதனால் இவர்களில் யாரேனும் தங்களது தொலைபேசியைத் தொலைத்துவிட்டால் பதட்டமடைகிறார்கள். அத்துடன் அவர்கள் nomophobia என்ற பாதிப்பிற்கும் ஆளாகிறார்கள். nomophobia என்பது தங்களிடமுள்ள மொபைல் போன் தொலைந்துவிட்டால் ஏற்படும் பயத்திற்கு சூட்டப்பட்டுள்ள பெயர்.

இன்றைய இளையத்தலைமுறையினர் அதிலும் 20 முதல் 30 வயதுடையவர்களை அவர்கள் ஆண்களாகயிருந்தாலும் சரி பெண்களாகயிருந்தாலும் அவர்களுடன் இந்த இலத்திரனியல் சாதனங்கள் இருக்கும். இவைகள் இல்லாமல் அவர்களால் இயங்கவே முடியாது. ஆனால் இதனால் அவர்கள் சந்திக்கும் ஆரோக்கிய கேடுகள் அதிகம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

தூக்கமின்மை, கழுத்து வலி, வறண்ட கண்கள், கொம்ப்யூட்டர் விசன் சிண்ட்ரோம் எனப்படும் குறைப்பாடு ஆகியவற்றை எதிர்கொள்கிறார்கள். தூக்கமின்மையின் காரணமாக இவர்களின் மூளையில் உறக்கத்திற்காக சுரக்கும் சுரப்பியின் செயல்பாட்டின் சமச்சீரின்மை ஏற்பட்டு உடல் ஆரோக்கிய நிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் இளைய தலைமுறையினர் இரவு உறங்கும் போது கூட தலையணைக்கு கீழே நீல நிறத்தில் ஒளிரும் வண்ணமுடைய விளக்குகளைக் கொண்ட மொபைல்களை வைத்திருப்பதால் இவை மூளையின் செயல்பாட்டில் தடுமாற்றத்தை தூண்டுகிறது. இதனால் உணர்வு நிலைகள் எதிர்பாராத தருணங்களில் தூண்டப்படும் நிலையும் உருவாகிறது. அத்துடன் இதற்கு அடிமையாகவும் ஆக்கிவிடுகிறது. இதிலிருந்து மீளவேண்டும் என்றால் சில வழிகளை உறுதியாக பின்பற்றவேண்டும்.

உறங்கச் செல்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக உங்களது கைப்பேசியை அணைத்துவைக்கவேண்டும் அல்லது பயன்படுத்துவதை தவிர்த்திட வேண்டும். 3 மாதத்திற்கு ஒரு முறை தொடர்ச்சியாக 7 நாள்கள் வரை பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளத்திற்கு விடுப்பு விடுக்கவேண்டும். வாரத்திற்கு ஒரு முறை ட்வீட்டர் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு விடுமுறை அறிவித்துவிட்டு அதனை தொடவேக்கூடாது. உங்களது மொபைல் போனில் யாராவது அழைத்தால், அதற்கு மட்டும் சுருக்கமாக பதிலளிக்கவேண்டும். அதேபோல் ஒரு நாளைக்கு 2 மணி நேரத்திற்கு மேல் பேசவேக்கூடாது. ஒரு நாளைக்கு 3 மணித்தியாலத்திற்கு மேல் மடிக்கணினியையோ அல்லது கணினியையோ பயன்படுத்துவதை தவிர்த்திடவேண்டும். உங்களது மொபைல் போனை ஒரு நாளைக்கு ஒரு முறை தான் சார்ஜ் செய்யவேண்டும் என்று உறுதி எடுத்துக் கொள்ளவேண்டும். இது போன்ற உறுதிமொழிகளை எடுத்து மொபைல் மற்றும் மடிக்கணினிகளின் பயன்பாட்டில் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டால் உங்களை மீட்டெடுக்க இயலும்.

டொக்டர் சிவக்குமார்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்