உதய்பூரில் ‘லவ் ஜிஹாத்’துக்கு (காதலித்து சமயம் மாறித் திருமணம் செய்துகொள்வது) எதிராக மற்றுமொரு கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உதய்பூரின் ராஜ்சமந்த் பகுதியில், ஒதுக்குப்புறமான மண் வீதியில் அரைவாசி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத ஆணின் பிணம் ஒன்று நேற்று புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டது. 

இதேவேளை, இணையதளத்தில் இச்சம்பவம் தொடர்பாக வெளியான பயங்கரமான காணொளியொன்றின் மூலம், மேற்படி சடலம் அஃப்ரஸுல் என்பவருடையது என்று இனங்காணப்பட்டுள்ளது.

அஃப்ரஸுல் மேற்கு வங்க மானிலத்தின் மால்டாவைச் சேர்ந்த தொழிலாளி. இவருக்கும் இந்துப் பெண்ணுக்கும் காதல் மலர்ந்துள்ளதாகத் தெரியவருகிறது.

இந்நிலையில், அஃப்ரஸுலை ஏமாற்றி தனிமையான இடத்துக்கு அழைத்துச் சென்ற ஷம்பூ லால் என்பவர், திடீரென கோடரி மூலம் கடுமையாகத் தாக்கி நிலைகுலையச் செய்த பின், அவர் மீது பெற்றோலை ஊற்றித் தீ வைத்தார்.

இந்தக் காட்சியை ஷம்பூ லாலின் நண்பர் ஒருவர் காணொளிப் பதிவு செய்துள்ளார்.

அஃப்ரஸுலுக்கு எரியூட்டிய பின்னர், லவ் ஜிஹாத்தில் ஈடுபடும் எவருக்கும் இதுதான் தண்டனை என காணொளியில் நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது தலைமறைவாகியிருக்கும் ஷம்பூ லாலைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் பொலிஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.