வட­மா­காண ஆளுநர் நிதி­யத்­தி­லி­ருந்து எடுக்­கப்­பட்டு வட­மா­காண கூட்­டு­றவு திணைக்­க­ளத்­திற்கு ஒதுக்கீடு செய்­யப்­பட்ட 32 மில்­லியன் ரூபா நிதிக்கு என்ன நடந்­தது? அந்த நிதி செல­வி­டப்­பட்­டி­ருந்தால் எதற்­காக செல­வி­டப்­பட்­டது? மாகா­ண­ச­பையின் அங்­கீ­காரம் பெறப்­பட்­டதா? செல­வி­டப்பட்டிருப்பின் அதற்­கான தர­வுகள் எங்கே என கேள்வி எழுப்­பி­யி­ருக்கும் மாகா­ண­சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவ­ஞானம்,

இந்த கேள்­வி­க­ளுக்கு உரிய பதிலை வட­மா­காண கூட்­டு­றவு அபி­வி­ருத்தி அமைச்சர் அனந்தி சசிதரன் அடுத்த அமர்வில் வழங்­க­வேண்டும் எனவும் வலியுறுத்தினார். கூட்­டு­றவு திணைக்­கள அதி­கா­ரிகள் தான் தோன்றித்தன­மாகவும் மாகா­ண­ச­பையை அவமதித்தும் செயற்பட இய­லாது. இந்­நி­லைமை  தொடர்ந்தால் வரவு–செலவு திட்­டத்தில் கூட்­டு­றவு திணைக்­க­ளத்­திற்­கான ஒதுக்­கீட்டை அதிகரிக்க முடியாது என்றும் கூறினார்.

வட­மா­கா­ண­ச­பையின் 111ஆவது அமர்வு நேற்­று­முன்­தினம் பேரவை செய­ல­கத்தின் சபை மண்­ட­பத்தில் நடை­பெற்­ற­போதே இதனைத் தெரி­வித்தார்.

அவைத்தலைவர் மேலும் கூறு­கையில், 

வட­மா­காண ஆளுநர் நிதி­யத்­தி­லி­ருந்து பெற்று கொடுக்­கப்­பட்ட 144 மில்­லியன் ரூபாவில் 32 மில்­லியன் ரூபாய் நிதி வட­மா­காண கூட்­டு­றவு திணைக்­க­ளத்­திற்கு வழங்­கப்­பட்­டது. மேற்­படி 144 மில்­லியன் ரூபாய் நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­ட­போது அந்த நிதி சில வகைப்­பாட்­டி­ன­ருக்கு கொடுக்­கப்­ப­ட­வேண்டும் எனவும், அவ்­வாறு கொடுக்­கப்­ப­டு­வ­தற்கு சபையின் அங்­கீ­காரம் பெறப்­ப­ட­வேண்டும் எனவும் கூறப்­பட்­டது. ஆனால் கூட்­டு­றவு திணைக்­க­ளத்திற்கு ஒதுக்­கீடு செய்­யப்­பட்ட 32 மில்­லியன் ரூபாய் நிதிக்கு என்ன நடந்­தது என்­பது தெரி­ய­வில்லை. எனவே

அந்த நிதி செல­வி­டப்­பட்­டுள்­ளதா? செல­வி­டப்­பட்­டி­ருந்தால் எதற்­காக செல­வி­டப்­பட்­டது? மாகா­ண­ச­பையின் அனு­மதி பெறப்­பட்­டதா? என்­பதை வெளிப்­ப­டுத்­த­வேண்டும். செல­வி­டப்­ப­ட­வில்லை என்றால் அது தொடர்­பான தர­வு­க­ளையும் உள்­ள­டக்கி கூட்­டு­றவு அமைச்சர் அடுத்த அமர்வில் சபைக்கு பதி­ல­ளிக்­க­வேண்டும். கூட்­டு­றவு திணைக்­கள அதி­கா­ரிகள் தாங்கள் நினைத்­தால்போல் நடந்து கொள்ள முடி­யாது. மாகா­ண­ச­பைக்கு பதில் சொல்லவேண்டும். எனவே அடுத்த அமர்வில் அமைச்சர் பதிலளிக்கவேண்டும். அதனைப் பொறுத்தே அடுத்த நடவடிக்கைகள் உள்ளது. அவ்வாறு இல்லையெனில் வரவு–செலவுத் திட்டத்தில் கூட்டுறவு திணைக்களத்திற்கான ஒதுக்கீட்டை ஆதரிக்கமாட்டோம் என்றார்.