மட்டக்களப்பு, கல்லடி பாலத்தில் வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால், அப்பகுதி வழியான போக்குவரத்து சற்று தடங்கலுக்கு உள்ளானது.

நல்லாட்சியில் கிழக்கு மாகாணசபையில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இன்று (6) மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கல்லடி பாலத்தில் ஒன்றுகூடிய பட்டதாரிகள் தங்களுக்கு இந்த நல்லாட்சி அரசாங்கம் வேலைகளைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்லடி பாலத்தை மறித்து போராட்டம் நடத்த முயன்றதால் அங்கு சிறு வாகன நெரிசல் ஏற்பட்டது.

அப்போது அங்கு வந்த மட்டக்களப்பு பொலிஸார் மாணவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டதுடன் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்தவேண்டாம் என கேட்டுக்கொண்டனர்.

அதையேற்று, வீதியை மறித்து போராட்டம் நடாத்திய பட்டதாரிகள், வீதியில் ஒரு பக்கமாக நின்று தமது போராட்டங்களை தொடர்ந்து நடத்தியதுடன் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜரும் கையளித்தனர்.