வெலிக்கடை சிறைச்சாலைக்குள் கடந்த 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரம் மற்றும் அதன்போது கொலை செய்யப்பட்ட 27 கைதிகள் தொடர்பிலான விசாரணைகள் குறித்த நிலைவரத்தை மன்றில் தாக்கல் செய்ய சட்ட மா அதிபருக்கு ஒரு வார கால அவகாசத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (6) வழங்கியது.

இவ்வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி எல்பி.டி.தெஹிதெனிய, ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி ரத்னவேல் மேற்படி விசாரணை அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படவேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்ததைச் சுட்டிக் காட்டினார்.

எனினும் விசாரணை அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்கும் ஆயத்தங்கள் எதுவும் இல்லை என சிரேஷ்ட அரச சட்டவாதி மாதவ தென்னகோன் தெரிவித்தார்.

இதையடுத்து விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க குறுகிய கால அவகாசம் ஒன்றினை வழங்குமாறு சட்டத்தரணி ரத்னவேல் கோரினார். அதனை ஏற்று நீதிமன்றம் வழக்கை எதிர்வரும் 13ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.