தங்காலை, குடாவெல்ல மக்கள் வங்கிக் கிளையில் துப்பாக்கி முனையில் இடம்பெற்ற பாரிய கொள்ளை தொடர்பான விசாரணைகளுக்கு ஆறு விசேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

குறித்த வங்கியினுள், நேற்று (5) காலை 9.50 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நுழைந்தனர். 9 மில்லி மீற்றர் ரக கைத்துப்பாக்கியைக் காட்டி முழு வங்கியையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின், கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளுக்காக வைக்கப்பட்டிருந்த அறுபது இலட்ச ரூபாவை முழுமையாகக் கொள்ளையிட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

வெளியேறும்போது, அங்கிருந்த வாடிக்கையாளர் ஒருவரையும் கொள்ளையர்கள் சுட்டுள்ளனர்.  அவர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆரம்ப விசாரணைகளில், கடந்த 28ஆம் திகதி, அளுத்கமவில் வெளிநாட்டு நாணயங்களை மாற்றும் நிலையத்தைக் கொள்ளையிட முற்பட்டவர்களே வங்கிக் கொள்ளையுடன் தொடர்புபட்டவர்களாக இருக்க வேண்டும் என சந்தேகம் எழுந்துள்ளது.

நாணய மாற்று நிலைய சி.சி.சி. ரி.வி. காணொளிகள், துப்பாக்கியில் பயன்படுத்தப்பட்ட ரவைகள் என்பவற்றை ஒப்பீடு செய்யும்போது பொலிஸாருக்கு இந்த சந்தேகம் எழுந்துள்ளது.