டெல்லி மேக்ஸ் வைத்தியசாலையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட குழந்தை உயிர் பிழைக்க, உயிரோடு இருப்பதாக கூறப்பட்ட குழந்தை  சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

டெல்லி ஷாலிமார்பாக் பகுதியில் மேக்ஸ் என்ற தனியார் வைத்தியசாலை உள்ளது. இங்கு கடந்த 30ஆம் திகதி ஒரு பெண் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிற்கு இரட்டை குழந்தைகள் பிறக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் ஒரு குழந்தை இறந்து பிறந்தது. பிறந்த இன்னொரு குழந்தைக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த குழந்தையும் இறந்துவிட்டதாக கூறி வைத்தியசாலை நிர்வாகம் அந்த குழந்தையின் உடலை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு பெற்றோரிடம் கொடுத்துள்ளனர்.

குழந்தையின் உடலை தகனம் செய்ய ஏற்பாடு செய்தபோது அதன் உடலில் அசைவு இருப்பதை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்து உயிருள்ள குழந்தையை இறந்துவிட்டது என தவறாக அறிவித்த வைத்தியசாலை நிர்வாகம் மீது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார்  விசாரணையை முடுக்கி விட்டுள்ள நிலையில் டெல்லி அரசும் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே உயிருள்ள குழந்தை இறந்த விவகாரம் தொடர்பாக இரண்டு வைத்தியர்களை,  வைத்தியசாலை நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது.

இந்நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மற்ற குழந்தை இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.