அடையாளம் காணப்படாத நபர் ஒருவர் பேருந்தின் பின் சக்கரத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கண்காணிப்பு கெமராவில் பதிவாகியுள்ளது. இணையத்தில் வெளியாகியிருக்கும் இக்காணொளி பரபரப்பாகப் பரிமாறப்பட்டு வருகிறது.

கர்நாடகாவின் ஹசன் நகரில் இச்சம்பவம் நேற்று (5) காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

புகையிரதக் கடவை ஒன்றின் அருகே அந்த மத்திய வயதுடைய மர்ம நபர் தவிப்புடன் காத்திருந்தார். தலையை வைப்பதற்குப் பொருத்தமான இடத்தைத் தேடியதுபோல் இருந்தது அவரது நடவடிக்கைகள்.

ஓரிரண்டு பேருந்துகள் கடந்து சென்றன. மூன்றாவதாக வந்த பேருந்து புகையிரதக் கடவையின் அருகே சற்றே மெதுவாகச் செல்கையில், பேருந்தின் பின் சக்கரத்தின் கீழ் பாய்ந்தார்.

இதன்போது பின் சக்கரம் மிகச் சரியாக அவரது தலையின் மீது ஏறி நசுக்கிச் சென்றது. இதனால், சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

அவர் யார், எதற்காகத் தற்கொலை செய்துகொண்டார் என்ற விபரங்கள் இதுவரை தெரியவரவில்லை. அவரது உடல் பொது வைத்தியசாலையில் உடற்கூற்றியல் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.