இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையில் 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் , ஒருநாள் மற்றும் இருபதுக்கு - 20 போட்டித் தொடர்கள் இடம்பெற்று வருகின்றன.

இரு அணிகளுக்குமிடையில் தற்போது 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இடம்பெற்று வருகின்றது. இன்று போட்டியின்  4 ஆவது நாளாகும். 

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான ஒருநாள் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், 9 பேரடங்கிய இலங்கைக் குழுவினர், இலங்கையில் இருந்து இந்தியா நோக்கி புறப்படுவதற்காக கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு சென்றிருந்தனர்.

இலங்கை அணியின் ஒருநாள் கிரிக்கெட் வீரர்கள் ஒன்பது பேரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

விளையாட்டுத்துறை அமைச்சின் அனுமதியின்றியே இவர்கள் இந்தியாவுக்குசெல்ல முற்பட்டுள்ளதாகவும் இதனால் இவர்கள் அனைவரும் விமானநிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறித்த 9 வீரர்களையும் மீள அழைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, அனுமதியின்றி மேலும் பல ஒருநாள் கிரிக்கட் வீரர்கள் இந்தியா சென்றுள்ளமை குறித்து தெரியவந்துள்ள நிலையிலேயே, விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்களை மீள அழைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.