கண்டி, நுவரெலியா பிரதான வீதியில் இறம்பொடை பகுதிக்கு அருகாமையில் அமைந்துள்ள  பிரபலமான ஆலயம் ஒன்றில் பெருந்தோட்ட தமிழர்கள், யாழ்ப்பாணத் தமிழர்கள் என இருவேறாக பிரித்து அங்குள்ள செயற்பாடுகளை முன்னெடுப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றார்கள்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மேற்படி ஆலயத்தில், கடந்த காலங்களில் அனைத்து தரப்பினரையும் ஒன்றினைத்து செயற்பட்டு வந்த இந்த ஆலயத்தில் அண்மைய காலப்பகுதியில் மலையக தமிழர்கள், யாழ்ப்பாண தமிழர்கள் என பிரதேச அடிப்படையில் பிரித்து சில செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. 

இச்சம்பவம் தொடர்பில், நுவரேலியா மாவட்ட இராஜாங்க அமைச்சருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஆலயங்களில் எந்தவிதமான பாகுபாடுகளுமின்றி பக்தர்களை வழிநடத்த வேண்டும் இதுதான் நடைமுறை. ஆனால், இந்த ஆலயத்தில் அவ்வாறானதொரு நிலைமை இல்லையென்று தெரிவிக்கப்படுகின்றது. 

பெருந்தோட்ட பகுதியை பிரதிநிதித்துவம் செய்த இந்த ஆலயத்தின் அனைத்து ஆயுட் கால உறுப்பினர்களுக்கும் எந்தவிதமான அறிவித்தலோ அல்லது எந்தவிதமான விடயங்கள் தொடர்பாகவும் அறிவிக்கப்படுவதில்லை எனவும் பெயர் குறிப்பிட விரும்பாத உறுப்பினர் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக இப்பகுதியில் உள்ள தலைவர்களும் மதத் தலைவர்களும் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் இந்த ஆலயத்தை நிர்வகித்துவரும் சின்மயா மிஷன் (இலங்கை) பொறுப்பாளர் மகேந்திரனிடம் எமது அலுவலகத்தில் இருந்து தொடர்பு கொண்டு கேட்டபோது, 

'பூஜை நிகழ்வுகள் எவ்வித பாரபட்சமும் இன்றியே நடைபெற்று வருகின்றது. கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் இவ்வாறானதொரு பிரச்சினை உருவானது. அதன் பின்னர் இது நிறுத்தப்பட்டது. ஒரு சிறிய குழுவினரே இவ்வாறான அசம்பாவிதங்களுக்கு காரணமாக இருக்கின்றனர். இந்த ஆலயத்தின் நிர்வாக அலுவலகத்தில் கூட மலையகத்தைச் சார்ந்த இளைஞர்களே பொறுப்பானவர்களாக இருக்கின்றனர். 

நிதி நிர்வாகப் பொறுப்பை கோரியே சம்பந்தப்பட்ட தரப்பினர் இவ்வாறான தவறான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால்,  இவ்வாலயத்தில் சகலரும் சமமாகவே மதிக்கப்படுகின்றனர் என்று அவர் தெரிவித்தார்."