வவுனியா - மன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள வன்பொருள் அங்காடி (ஹாட்வெயார்) ஒன்று இன்று மாலை திடீரென தீப்பற்றி எரிந்ததையடுத்து குறித்த பகுதிக்கு வருகைதந்த தீயணைப்பு வாகனத்தில் தண்ணீர் இன்மையால் அங்கிருந்து குறித்த வாகனம் திரும்பிச்சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா - மன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள வன்பொருள் அங்காடி (ஹாட்வெயார்) ஒன்று இன்று மாலை திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

இந்நிலையில், குறித்த இடத்திற்கு தீயணைப்பு பிரிவின் வாகனம் ஒன்று வருகைதந்த போதும் குறித்த வண்டியில் தண்ணீர் இல்லை என தெரிவித்து அந்த வண்டி திரும்பிச் சென்றுள்ளது.

எனினும் சுமார் 2 மணித்தியாலத்திற்கு மேலாக வன்பொருள் அங்காடி தொடர்ந்து எரிந்து  சாம்பராகியது. இதனால் பல இலட்சம் ரூபா பெறுமதியான ஹாட்வெயார் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

இதையடுத்த வருகைதந்திருந்த தீயணைப்பு வாகனம், பொலிசாரின் தண்ணீர் பவுசர் ஆகியன சம்பவ இடத்திற்கு வந்த போதும் அவர்களின் மந்தமான செயற்பாட்டால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்த தீ விபத்தினால் வவுனியா - மன்னார் பிரதான வீதி பல மணிநேரம் மூடப்பட்டிருந்ததுடன், பாதுகாப்பு பணிகளுக்காக பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை, வவுனியாவில் உள்ள விமானப் படையிடம் தீயணைப்பு வாகானம் இருந்த போதும் சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.