(எஸ்.ரவிசான்)

நாட்டின் 68 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த  692 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிபடையில் சிறுகுற்றங்களை புரிந்தோர் தண்டப்பணத்தினை செலுத்த முடியாமையினால் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருப்போர் என்ற  அடிபடையில் தெரிவு செய்யப்பட்டவர்களையே மேற்படி பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்வதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்தது.

இருந்த போதும் இன்றைய தினம் பொது மன்னிப்பின் அடிபடையில் எந்தவொரு அரசியல் கைதியும் விடுதலை செய்யப்படவில்லை.  கைதிகளின் விடுதலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய  குறிப்பிடுகையில்  

எமது நாட்டின் 68 ஆவது சுதந்திர தினமானது இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. வழமைப்போலவே சுதந்திர தினத்தன்று   நாட்டின் ஜனாதிபதியின் தீர்மானத்தின்படி பொது மன்னிப்பின்  அடிபடையில் நாடாளாவிய  ரீதியில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தெரிவு செய்யப்பட்ட    கைதிகள் சிலர் விடுதலை செய்யப்படுவார்கள்.

அந்தவகையில் இம்முறையும் 68 ஆவது  சுதந்திர தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் பல்வேறு வகையான குற்றசாட்டுகளின் பிரகாரம் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 692 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.