நாட்டிலேற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 4 ஆயிரத்து 886 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று மாலை 4 மணி வரையான தகவலின் அடிப்படையில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளிலே மேற்கண்ட தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சீரற்ற காலநிலையால் 18 ஆயிரத்து 781 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 26 பேர் காயமடைந்துள்ளதாகவும்  5 பேர் காணாமல்போயுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட 179 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 36 பேர் 9 தற்காலியமாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பான அமைவிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவ் அனர்த்தத்தால் 202 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 3 ஆயிரத்து 250 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இதேவேளை, மேல் மாகாணம், தென் மாகாணம், மத்திய மாகாணம்,  ஊவா மாகாணம்,  ஆகிய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது. இன்று (30) திட்டமிடப்பட்டிருந்த இறுதித் தவணை பரீட்சைகள் யாவும் பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருந்து.

காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, இரத்தினபுரி, நுவரேலியா, பதுளை, மொனராகலை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் நோக்கி வந்த இரண்டு விமானங்கள் காலநிலை சீரின்மையால் மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டன.

சீரற்ற காலநிலை குறித்து மக்கள் அனாவசியமாக அச்சமடையத் தேவையில்லை என, தேசிய பேரிடர் முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இலங்கைக்குத் தென்மேற்குத் திசையில், வங்கக் கடலில் ஏற்பட்டிருக்கும் தாழமுக்கம், நாட்டைவிட்டு வெளியேறிவருவதாகவும் நாளை மாலை மழைவீழ்ச்சி குறைவடையுமெனவும் இன்று இரவு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியை எதிர்பார்க்க முடியுமெனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.