மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக பொகவந்தலாவை பகுதியில் 85 குடும்பங்களை சேர்ந்த 310 பேர் பாதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் மற்றும் குறித்த பிரிவுக்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்று புதன் கிழமை இரவு பெய்த கடும் மழையின் காரணமாக டின்சின் பகுதியில் உள்ள விவசாய பயிர்ச்செய்கை பண்ணை வெள்ள நீரில் முழ்கியுள்ளதுடன் பொகவந்தலாவை பொகவனை தோட்டத்தில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேரும் பொகவந்தலாவை பெற்றோசோ பிரீட்லென் தோட்டத்தில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேரும் பொகவந்தலாவை கெம்பியன் கிழ்பிரிவு மற்றும் 57ஆகிய தோட்டப்பகுதியிலுள்ள 35குடும்பங்களை சேர்ந்த 150 பேரும் குயினாதோட்டத்தில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேரும் இவ்வாறு பாதிக்கப்பட்டு மொத்தம் 310 பேர் பாடசாலைகளிலும் சிறுவர் நிலையங்களிலும் தங்கவைக்கபட்டுள்ளனர்.

இதேவேளை பொகவந்தலாவை, பாலாங்கொட பிரதான வீதியில் பெற்றோசோ பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு பாரியகற்களும் சரிந்து வீழ்ந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பொகவந்தலாவை தர்மகீர்த்தி பாடசாலையின் களஞ்சியசாலையின் கட்டிடத்தின் மீது பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் களஞ்சியசாலை கட்டிடம் பகுதிஅளவில் சேதமடைந்துள்ளது.

மழையின் காரணமாக வீடுகளில் உள்ள பொருட்களும் பெருமளவில் சேதமடைந்துள்ளன.

இதேவேளை பாதிக்கபட்ட மக்களுக்கு சமைத்த உணவுகளை தோட்டநிர்வாகம் மற்றும் கிராம உத்தியோகத்திரின் ஊடாக வழங்கபட்டு வருகின்றது.

இந்நிலையில், மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கவுகள் மூன்று திறக்கபட்டுள்ளதுடன் அப்பகுதி மக்களை அவதானமாக இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.