ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட சுரங்கப்பகுதிக்கு அண்மித்த பகுதியில் இன்று அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக மலையக ரயில் சேவைகள் பாதிப்படைந்துள்ளன.

இதன் காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற இரவு நேர தபால் ரயில் ஒஹிய புகையிரத நிலையத்தில் தரித்துள்ளதுடன், பாதிப்பேற்பட்டுள்ள ரயில் பாதையை சீர்செய்யும் பணிகளில் ரயில் நிலைய ஊழியர்களும், தியத்தலாவ இராணுவத்தினரும் ஈடுப்பட்டுள்ளனர்.

மண்சரிவு காரணமாக மலையக புகையிரத பாதையின் ஊடான சேவைகள் தாமதமாகலாம் என ரயில் நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்ற ரயில் பயணிகள் போக்குவரத்து தடைப்பட்ட காரணத்தினால் இன்று அதிகாலை 4 மணியிலிருந்து குறித்த ரயிலிலேயே தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு கொழும்பு பதுளை ரயில் சேவைகள் ஒஹிய புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு, பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி செல்லும் அனைத்து ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

பிரதேசத்தில் பலத்த காற்று வீசி வருவதுடன், மழையும் பெய்து வருவதனால் சீர்செய்யும் பணிகளில் தாமதம் ஏற்படுவதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.