பெருந்தொகையான இலங்கை நாணயத்தாள்களை டுபாய் நாட்டுக்கு சட்டவிரோதமாக  எடுத்துச்செல்ல முயன்ற நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர் கொழும்பைச் சேர்ந்த 46 வயதுடைய வர்த்தகரொருவரென சுங்க அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

குறித்த நபரிடமிருந்து 23 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான ஆயிரம் ரூபா நோட்டுக்கள் அடங்கிய இலங்கை நாணயத்தாள்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 

இதேவேளை, நாட்டிலிருந்து சாதாரண நபரொருவர்  20 ஆயிரம் ரூபா நாணயத்தாள்களை மாத்திரமே விமான நிலையத்திலிருந்து எடுத்துச் செல்லமுடியுமென சுங்க அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சுங்க நிலைய அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.