(எம்.எப்.எம்.பஸீர்)

உள்ளூராட்சி தேர்தல்களுக்கு இன்று வேட்பு மனு கோரப்பட்ட நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவின் கீழ் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி முதன் முதலில் கட்டுப் பணம் செலுத்தியுள்ளது.  

அந்த கட்சியானது இன்று மாலைக்குள் 3 மாவட்டங்களில் 16 தொகுதிகள் தொடர்பில் கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளது. முதலில் களுத்துறை மாவட்டத்திலும் பின்னர் காலியிலும் அதனை தொடர்ந்து கம்பஹாவிலும் அக்கட்சி சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

 கட்டுப்பணம் செலுத்தும் முதல் வைபவத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கலந்துகொன்டு களுத்துறை மாவட்ட செயலகத்தில் கட்டுப்பன்ணத்தை இன்று முற்பகல் செலுத்தினார்.

அதன்படி தாமரை மொட்டை சின்னமாகக் கொண்ட அக்கட்சி, களுத்துறை மாவட்டத்தில், பாணந்துறை, ஹொரணை, பேருவளை ஆகிய நகர சபைகள், பண்டாரகம மற்றும் அகலவத்தை ஆகிய பிரதேச சபைகள் தொடர்பில் களுத்துறை மாவட்ட செயலகத்தில்  கட்டுப்பணம் செலுத்தியது.

காலி மாவட்டத்தில் ஹிக்கடுவை, அம்பலாங்கொடை ஆகிய நகர சபைகள் தொடர்பிலும் பலப்பிட்டிய, அக்மீமன மற்றும் நெலுவ ஆகிய பிரதேச சபைகள் தொடர்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. 

இதனைவிட கம்பஹா மாவட்டத்தின் ஜா எல, மினுவாங்கொடை, வத்தலை - மாபோலை மற்றும் பேலியகொட அகைய நகர சபைகள் தொடர்பிலும் வத்தை, பியகம ஆகிய பிரதேச சபைகள் தொடர்பிலும் அந்த கட்சியானது கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.