இந்திய அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 239 ஓட்டங்களால் இலங்கை அணி படுதோல்வியடைந்துள்ளது.

இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது.

இத் தொடரின் முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன்கார்டன் மைதானத்தில் இடம்பெற்றது.

இப்போட்டி மழையின் குறுக்கீடுகளுக்குமத்தியில் இடம்பெற்ற போதிலும் போட்டி இறுதியில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது போட்டி கடந்த 24 ஆம் திகதி நாக்பூரில் ஆரம்பமாகியது.

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ஓட்டங்களைப்பெற்றுக்கொண்டது.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பாக அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், இசாந்த் சர்மா மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இந்நிலையில் தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இந்திய அணி விராட்கோலியில் இரட்டைச்சதம் மற்றும் முரளி விஜய், புஜாரா, ரோஹித் சர்மா ஆகியோரின் சதங்களின் துணையுடன் 6 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 610 என்ற ஸ்திரமான ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றிருந்தபோது இந்திய அணி ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இலங்கை அணி சார்பாக பெரேரா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

405 ஓட்டங்களால் முன்னிலைபெற்ற போது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடை நிறுத்திய இந்திய அணி நேற்றைய 3 ஆம் நாள் ஆட்டத்தின் தேனீர் இடைவேளையின் பின்னர்  இலங்கை அணியை 2 ஆவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடுமாறு அழைத்தது.

நேற்றைய 3 ஆம் நாள் ஆட்ட நிறைவின்போது இலங்கை அணி ஒரு விக்கெட்டை இழந்து 21 ஓட்டங்களைப்பெற்றிருந்தது.

இன்று 4 ஆம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், மதியநேர இடைவேளையின் பின்னர் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ஓட்டங்களைப்பெற்று இன்னிங்ஸ் மற்றும்  239 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.

இப்போட்டியில் இந்திய அணித் தலைவர் விராட்கோலி 213 ஓட்டங்களைப்பெற்றார்.

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 300 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார்.

இலங்கை அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி டில்லியில் இடம்பெறவுள்ளது.