அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கிலும் அரசியலில் ஈடுபடும் பெண்கள் மீதான வன்முறையைத் தடுத்து நிறுத்தும் வகையிலும் ‘அவளைத் தேர்ந்தெடுப்போம், வன்முறையை ஒழிப்போம்’ என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்ச்சித் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 52 சதவீதம் பெண்கள். என்றாலும் அரசியலில் பெண்களின் பங்களிப்பு வெறும் 5.3 சதவீதமே!

பாலின அடிப்படையிலான சமூக, கலாச்சார நெறிகள் மற்றும் பாரபட்சங்களாலேயே பெண்கள் அரசியலில் ஈடுபடுவதைத் தவிர்த்து வருவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன.

மேலும், வன்முறைகள், பயமுறுத்தல்கள் போன்றன காரணமாகவும் பெண்கள் அரசியலில் ஈடுபடுவது புறச் சக்திகளால் தடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், பால் நிலை ரீதியிலான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துவதற்கான பதினாறு நாள் நடவடிக்கைகள் நாளை (25) முதல் உலகளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்நிகழ்வுகள் எதிர்வரும் டிசம்பர் பத்தாம் திகதி நிறைவுபெறும்.

இதை முன்னிட்டு, ‘அவளைத் தேர்ந்தெடுப்போம், வன்முறையை ஒழிப்போம்’ என்ற விழிப்புணர்வு நிகழ்வொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பையும் பெறும் நோக்கில், பிரத்தியேக வாகனம் ஒன்று அடுத்த பதினாறு நாட்கள் இலங்கை முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இதன்போது, பெண்களின் அரசியல் பிரவேசத்துக்கு ஆதரவாக பொதுமக்களின் கையெழுத்துக்களும் திரட்டப்படவுள்ளன.

பால் ரீதியிலான வன்முறைக்கு எதிரான தேசிய அமைப்பு இந்த நிகழ்வை ஒழுங்கு செய்துள்ளது.