எகிப்தின் வட பிராந்திய மாகாணம் சினாயில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு மற்றும் துப்பாக்கித் தாக்குதலில் சுமார் 150க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

பிர் அல் அபேத் நகரிலுள்ள அல் ராவ்தா பள்ளிவாசல் மீதே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமையான இன்று, அல் ராவ்தா பள்ளிவாசலில் ஜும் ஆ தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது, நான்கு ‘பிக்-அப்’ ரக வாகனங்களில் வந்த பயங்கரவாதிகள், வந்த வேகத்தில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது குண்டுகளை வீசியும் துப்பாக்கிகளை இயக்கியும் வன்முறையில் இறங்கியதாக சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றனர்.

தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களில் பலரும் எகிப்திய இராணுவத்தின் ஆதரவாளர்களே என்பதால், அவர்களை இலக்கு வைத்தே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

இதில் பலியானவர்கள் தவிர மேலும் நூறு பேர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.