பேருந்தில் கைபேசி திருடுபோனதால் எழுந்த வாக்குவாதத்தில் பாடசாலை மாணவர்கள் இளைஞர் ஒருவரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் டெல்லியில் நேற்று (23) பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பதர்பூரில் இருந்து கிளம்பிய இந்தப் பேருந்தில் 20 வயது இளைஞர் ஒருவர் பயணித்தார். லஜ்பத் நகர் என்ற இடத்தைப் பேருந்து அண்மித்ததும் பாடசாலைச் சீருடையுடன் ஐந்து மாணவர்கள் பேருந்தில் ஏறியுள்ளனர்.

சிறிது நேரத்தில் தனது கைபேசி காணாமல் போனதை இளைஞர் உணர்ந்திருக்கிறார். சந்தேகத்தின் பேரில் மாணவர்களிடம் அது குறித்து விசாரித்தார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது.

திடீரென மாணவர்களில் ஒருவர் இளைஞரைப் பிடித்துக்கொள்ள, மற்றொரு மாணவர் தம் வசமிருந்த ஒரு கத்தியை எடுத்து இளைஞரின் கழுத்தை அறுத்துள்ளார். ஏனைய மாணவர்கள் தம் வசமிருந்த கூரிய ஆயுதங்களால் இளைஞரைக் குத்தியுள்ளனர்.

பின்னர் பேருந்துச் சாரதியை பயமுறுத்திவிட்டு நடுவழியிலேயே இறங்கித் தப்பிச் சென்றனர்.

இது சண்டையால் ஏற்பட்டதா அல்லது சிறுவர்களை வைத்துச் செய்யும் கூலிப்படையினரின் வேலையா என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சீருடையை வைத்து பாடசாலையை அடையாளம் கண்டிருக்கும் பொலிஸார், கொலைகாரர்களைக் கண்டுபிடிக்க மாணவர்களின் பதிவுகளை ஆராய்ந்து வருகின்றனர்.