இந்திய அணியின் சுவர் என்று முன்னொரு காலம் வர்ணிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிட்டின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பாராட்டுக்களுடன் பரிமாறப்பட்டு வருகிறது.

விஷயம் இதுதான்! ட்ராவிட் தனது இரண்டு மகன்மாருடன் மாணவர்களின் விஞ்ஞானக் கண்காட்சிக்குச் சென்றிருக்கிறார். அங்கே அவர் எந்தவித ஆடம்பரமோ, அலட்டலோ இல்லாமல் மக்களுடன் வரிசையில் நின்று கண்காட்சியைப் பார்வையிட்டிருக்கிறார்.

இந்தப் படம் வெளியாகிய ஒரே நாளில் 12 ஆயிரம் ‘லைக்’குகளை வாங்கியுள்ளதுடன் ஆறாயிரம் முறை மீள்பரிமாறப்பட்டும் இருக்கிறது.

புகழ்பெற்ற நட்சத்திரத் துடுப்பாட்ட வீரராக இருந்தும் மக்களோடு மக்களாக இயங்கும் அவரது எளிமையை இணையதளவாசிகள் புகழ்ந்து தள்ளியிருக்கின்றனர்.

“எனது மருமகள் கற்பிக்கும் பாடசாலையில்தான் ட்ராவிட்டின் மகன்மாரும் படிக்கின்றனர். ஏனைய பெற்றோர்கள் போலவே, பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புகளுக்கு ட்ராவிட் தவறாமல் கலந்துகொள்வதுடன், எந்தவித பந்தாவும் இன்றி மிகச் சாதாரணமாகப் பழகுவார் என்று எனது மருமகள் கூறியிருக்கிறார்” என்று ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார்.