ஆதிகாலத்தில் பெரும் சாதனைகளை நிகழ்த்திய எமது பாரம்பரிய சுதேச மருத்துவத்துறைக்கு உரிய கௌரவத்தை வழங்கி, அதன் முன்னேற்றத்திற்கான சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியுடன் மேலைத்தேய மருத்துவ முறையில் ஏற்பட்ட புதிய கண்டுபிடிப்புக்கள் மற்றும் ஆய்வுகள் காரணமாக துரித சிகிச்சை முறைகளின் மீது மக்கள் கவனம் செலுத்தியமையினால் பாரம்பரிய சுதேச மருத்துவத்துறை பின்னடைவுக்கு உள்ளாகியுள்ள போதிலும் வரலாற்றில் நாம் ஆரோக்கியம் மிகுந்த சமூகமாக காணப்பட்டமைக்கு அனுபவம் வாய்ந்த சுதேச மருத்துவ முறையே காரணமாகுமென ஜனாதிபதி தெரிவித்தார். 

நேற்று வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெற்ற “Tradmed International Sri Lanka 2017” பாரம்பரிய சுதேச மருத்துவ முறைகள் பற்றிய சர்வதேச மாநாடு மற்றும் கல்விசார் வர்த்தகக் கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, தேசிய மருத்துவ முறை பற்றிய ஆர்வத்தை மீண்டும் சமூகத்தில் ஏற்படுத்தி சுதேச மற்றும் ஆயுர்வேத மருத்துவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சமூக அந்தஸ்தையும் வரவேற்பையும் மீண்டும் பெற்றுக்கொடுப்பதற்கு இத்தகைய மாநாடுகளின் மூலமாக விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென்றும் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சு, உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் என்பவற்றின் இணை ஏற்பாட்டில் இடம்பெறும் இம்மாநாடு நேற்று முதல் 25 ஆம் திகதி வரை கொழும்பு வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெறுகின்றது. 

பாராம்பரிய சுதேச மருத்துவ துறை ஆய்வுகளினால் நிரூபிக்கப்பட்டுள்ள உலகத்தரம் மிக்க அனுபவங்கள், அறிவு மற்றும் ஆற்றல்களை பரிமாறிக்கொள்வதற்கு தேவையான பின்னணியினை ஏற்படுத்துதல் இந்த மாநாட்டின் குறிக்கோளாக அமைவதுடன், பல்வேறு மருத்துவ துறைகளிலும் நிபுணத்துவம் பெற்றுள்ள மருத்துவ நிபுணர்கள் தமது ஆற்றலை விஞ்ஞான ரீதியான ஆய்வுகளுடன் வெளியிடுவதற்கு அரசு மற்றும் தனியார்துறை தொழில் முயற்சியாளர்களுடன் இணைந்து கொள்வதற்கான பின்னணியும் இதனூடாக ஏற்படுத்தப்படுகின்றது. 

அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், ஜப்பான், சீனா, இந்தியா, தென்கொரியா, நெதர்லாந்து, ஈரான் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிபுணர்களாலும், எமது நாட்டைச் சேர்ந்த நிபுணர்களாலும் நிகழ்த்தப்படும் 48 விரிவுரைகள் இம்மாநாட்டில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். மாநாட்டின் இறுதியில் கொழும்பு பிரகடனம் முன்வைக்கப்பட்டு மாற்று மருத்துவ முறைகளை மேம்படுத்துதல் தொடர்பான விசேட கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது.